132
வஸந்தமல்லிகா
அதைக் கேட்ட மல்லிகா சற்று நேரம் மெளனமாக இருந்தாள். அவனது வார்த்தைகள் அவளது செவிகளில் தொனித்துக் கொண்டே இருந்தன. "எனக்கு உதவி செய்ய உம்மால் ஆகாது" என்று மிருதுவாக விடையளித்தாள் மல்லிகா.
பீம : ஸஞ்சலாட்சி! அப்படிச் சொல்லாதே. என்னால் எவ்விதமான உபயோகமுமில்லை என்று நினைக்காதே. துரும்பும் பல் குத்த உதவுமல்லவா? உன்னுடைய விசனம் இன்னதென்று தெரிவி; என்னை அலட்சியம் செய்யாதே - என்று நிரம்பவும் அன்போடு விடையளித்தான்.
மல்லி : இல்லை; இல்லை நான் உம்மை அலட்சியம் செய்யவில்லை. ஆனால், நான் என் மனசை ஒருவரிடத்திலும் வெளியிட மாட்டேன். விசனத்தை மறக்க ஏதாவது மருந்திருந்தால் சொல்லும்.
பீம : விசனத்தைச் சந்தோஷத்தால் மறக்க வேண்டும்; வேறு விஷயத்தில் நாம் நமது மனதைச் செலுத்த வேண்டும். வேறு விஷயத்தில் உண்டாகும் சந்தோஷமே நம்முடைய மனசை மாற்றக் கூடிய மருந்து. உனக்கு இல்லறமென்னும் ஆநந்தத்தை உண்டாக்கினால் இந்த விசனம் மாறிப் போகும். அதை உண்டாக்கும் பாக்கியம் எனக்கு ஏற்பட்டால், ஆகா! உன் விசனமெல்லாம் ஒரு நொடியில் பறந்து போகாதா - என்று நிரம்பவும் பரிவாகப் பேசிக் கொண்டே அவளுக்கருகில் நெருங்கி நின்று. கொண்டு, நயந்த குரலில், "ஸஞ்சலாட்சி! நான் உண்மையைச் சொல்லுகிறேன். கோபித்துக் கொள்ளாதே! என் மனசை உள்ளபடி உனக்குத் தெரிவிக்கிறேன். உன் விஷயத்தில் எனக்கு உண்டாயிருப்பது சாதாரணமான ஆசையல்ல. அதை எப்படி வெளியிடுவேன்! எப்போதும் உன்னை விட்டுப் பிரியாமலிருந்து உன்னைச் சந்தோஷமாக வைத்திருப்பதே எனக்குப் பெருத்த பாக்கியமாகத் தோன்றுகிறது. கண்ணே! நீ என்னைக் கலியாணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொள்வாயானால் உன்னுடைய விசனத்தை ஒரு நொடியில் போக்குவேன். ஸஞ்சலாட்சி என்னை நம்பு. ஆயிசு பரியந்தம் உனக்கு ஸுகமுண்டாகும். ஆகா! உன்மேல் உண்டாயிருக்கும் காதலை இனி நான் எப்படி மாற்றுவேன்! ஸஞ்சலாட்சி! நீ என்னைப் காப்பாற்ற வேண்டும்"