136
வஸந்தமல்லிகா
மற்றவற்றை நிறுத்தி ஒரு மாசத்திற்கு மேலாகிறது. இருந்தாலும் உன்னுடைய திருப்தியின் பொருட்டு கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்" என்று கூறியவண்ணம், அவற்றில் சிறிதளவு உட்கொண்டார். அவளது நற்குணத்தையும், அன்பையுங் காண அவருக்கு அவளிடத்தில் ஒருவித அபிமானமுண்டாயிற்று.
"நீ கம்பியிலிருந்து விழுந்ததைக் கேள்விப்பட்டு நான் நிரம்ப விசனமடைந்தேன். நீ இங்கே வந்திருப்பது எனக்கு இது வரையில் தெரியாது! நல்ல வேளையாக நீ செளக்கியமடைந்தாயே! இந்தக் கண்டத்துக்கு நீ தப்பியது, உன்னுடைய முன்னோர் செய்த புண்ணியத்தினாலேதான்! நீ எப்படி விழுந்தாய்?" என்றார்.
தமய : இப்போது இருப்பதைப் பார்த்தால், நானே விழுந்ததாக நினைப்பதற்கில்லை. அவர்கள் வேண்டுமென்றே என்னைக் கீழே தள்ளி விட்டிருக்கலாமென்று நினைக்கிறேன். வேறொருத்தியை எனக்குப் பதிலாக கொண்டுவந்து வைக்க வேண்டுமென்னும் எண்ணத்துடன் அவர்கள் இப்படிச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். எனக்குப் பதிலாக வந்திருக்கிறாளே அவளை நீங்கள் பார்த்தீர்களா?
வஸ : நான் பார்க்கவில்லையே! அவளுடைய பெயர் என்ன?
தமய : அவளுடைய பெயர் ஸஞ்சலாட்சியாம். அவள் யாரென்பதும், எந்த ஊரென்பதும் ஒருவருக்கும் தெரியாது. அவள் இதற்கு முன் நாடக மேடையிலேயே ஏறியவல்லவாம். நான் விழுந்த பிறகே அவள் ஆடத் தொடங்கினாளாம். இப்போது ஊரார் எல்லோரும் அவளுடைய நினைப்பே நினைப்பாகக் கொண்டு பைத்தியம் பிடித்து அலைகிறார்களாம்.
வஸ : ஆம்; நானும் அவளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இப்போதுதான் உனக்குச் செளக்கியமாய் விட்டதே; நீ ஏன் ஊருக்குத் திரும்பிப் போகக் கூடாது?
தமய : அந்த ஊருக்குப் போகவே என் மனசுக்குப் பிடிக்கவில்லை. அங்கிருப்பவர்கள் எல்லோரும் என் விஷயத்தில் வஞ்சகங் செய்து விட்டார்கள். அவர்களுடைய முகத்தில் விழிப்பது கூடப் பாவம்.