140
வஸந்தமல்லிகா
முன்று நாட்கள் செல்ல, அடுத்த நாள் இரவு, தமயந்தி வழக்கம் போல அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்தபோது, அவருக்குத் தமது சுய நினைவு நன்றாக உண்டாயிற்று. அவர் கண்களை விழித்துப் பார்த்து, "நீயா இருக்கிறாய்! நீ எப்படி வந்தாய்? எத்தனை நாட்களாக இருக்கிறாய்?” என்றார். உடனே தமயந்தி நடந்தவற்றையெல்லாம் ஆதியோடந்தமாகத் தெரிவிக்க, அவருக்குத் தமயந்தியினிடத்தில் உண்டான நன்றி விசுவாசத்திற்கு அளவே இல்லை. “தமயந்தி பாயி! உனக்கு நான் எப்படி என்னுடைய நன்றியறிதலைக் காட்டப் போகிறேன்! ஆகா! ஸ்திரீகளின் குணமே குணம்! உங்களுடைய அன்பே அன்பு! இத்தனை நாட்களாக நீ தூக்கமில்லாமலும் ஒழுங்காக ஆகாரமில்லாமலும் இருக்கிறாயே! இதனால் உனக்கு ஏதாவது வியாதி வந்து விட்டால் என்ன செய்கிறது? தயவு செய்து நீ அப்பால் போய் சற்று நேரம் படுத்துக் கொள்” என்ற வற்புறுத்திக் கூற அவள் அப்பாற் சென்று சயனித்துக் கொண்டாள். மறுநாட் காலையில் வஸந்தராவ் விழித்துக் கொண்டபோது வழக்கம் போல தமயந்தி தமக்கருகில் கவலையோடு நின்று கொண்டிருந்ததைக் கண்டு, “அடடா! இதற்குள் தூங்கி எழுந்து விட்டாயா? என் விஷயத்தில் எவ்வளவு கவலை! என்னுடைய உயிரை நீ காப்பாற்றியதைப் பற்றி நான் சந்தோஷப்படவில்லை. அதிகமாகப் பழக்கமில்லாத என் விஷயத்தில் நீ உன்னுடைய உடம்பை வதைத்துக் கொண்டு, பல நாட்களாக ஆகாரம் நித்திரை இன்றி வருந்தி இங்கே இருந்து, நீ காட்டும் அந்தரங்க அபிமானத்தைப் பற்றித்தான் உன்னை நான் தெய்வமாக மதிக்கிறேன். நீ என்னுடைய செல்வத்தை எல்லாமே கேட்பதானாலும், நான் கொடுத்து விடுவேன். என் மனம் உன் விஷயத்தில் அவ்வளவு அபாரமான அபிமானத்தைக் கொண்டிருக்கிறது” என்றார்.
“அப்படி நானொன்றும் பெரிய காரியம் செய்து விடவில்லையே! மனிதர் ஒருவருக்கொருவர், சாதாரணமாகச் செய்து கொள்ள வேண்டிய காரியந்தானே இது! மிருகங்கள் கூட தமக்குள் ஒன்றிற்கு ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால், எவ்வளவோ வருந்தி அதை உபசரிக்கின்றனவே! அப்படி இருக்க மனிதர் உதவுவது ஒரு பெரிய காரியமா? தாங்கள் இதை அடிக்கடி பாராட்டிப் பேசுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்றாள்.