உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மல்லிகாவின் புதிய கணவன்

151

வைத்து, "வரவு நிரம்பவும் அபூர்வமாக இருக்கிறது! இந்தக் சேவகனால் என்ன காரியம் ஆக வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன். சொல்லலாம்" என்றான்.

அதை கேட்ட மோகன்ராவ் பெரிதும் மகிழ்ச்சியடைந்து "எனக்கு அவசரமாகப் பதினாயிரம் ரூபாய் வேண்டும்" என்றார்.

"இதுதானா பிரமாதம்! இதோ தருகிறேன்" என்று மறு மொழி கூறியவண்ணம் ஸகாராம் தனக்கு அருகிலிருந்த ஓர் இரும்புப் பெட்டியைத் திறந்தான். அதில் பணப்பையின் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு படத்தை எடுத்து வெளியில் வைத்து விட்டு, பணத்தை எடுத்து எண்ணினான். அப்போது அருகிலிருந்த மோகனராவ் படம் யாருடையதென்பதைப் பார்த்தார். அதில் அழகிய ஒரு பெண்ணின் உருவம் வரையப்பட்டிருந்தது, அவர் அதன் பேரழகைக் கண்டு நிரம்பவும் வியப்படைந்தார். அருகிலிருந்த ஸ்திரீயைத் தான் எப்போதோ பார்த்ததாக அவருக்கு நினைவுண்டாயிற்று. இமை கொட்டாமல் அதையே அவர் கவனித்தார். அதன் கண்களின் வசீகரமும், உதடுகளில் தவழ்ந்த புன்சிரிப்பும் அவரது மனதைக் கவர்ந்தன. "இந்தப் படம் நிரம்ப அழகாயிருக்கிறதே! இது யாருடையது?" என்று மோகனராவ் வினவ, ஸகாராம் ராவ், "இது இறந்து போன என்னுடைய தங்கையின் படம்" என்று தாமதமின்றி விடையளித்தான். ஆனால், உண்மையில் அது பரசுராமபாவாவின் இளைய மனைவியினது படம். வஸந்தராவுக்குத் தெரியாமல் அவன் அதை இரகசியமாக எடுத்து வந்து ஒளித்து வைத்திருந்தான்.

மோ : இந்தப் படத்தின் மேல் எனக்கு நிரம்ப ஆசையாக இருக்கிறது. இதை நான் எடுத்துக் கொள்ளலாமா? - என்று புன் சிரிப்போடு கேட்டார்.

சகா : இதை அடிக்கடி பார்ப்பதனால் நான் என்னுடைய விசனத்தை மறந்து வருகிறேனே - என்று அசட்டு நகையோடு கூறினான்.

மோ : நீர் கொடுக்கும் பணத்தில் 100- ரூபாய் இந்தப் படத்துக்காகப் பிடித்துக் கொண்டு மிகுதியைக் கொடும். முழுத் தொகையையும் என் பேரில் கடன் எழுதிக் கொள்ளும். நீர் மறுக்காமல் இதை எனக்கு அவசியம் கொடுக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/169&oldid=1233833" இலிருந்து மீள்விக்கப்பட்டது