பக்கம்:வசந்த மல்லிகா.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20-வது அதிகாரம்

வைரத்தினும் கடிய மனம்

மது ஜாகையை அடைந்த மோகனராவ் படத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு இமை கொட்டாமல் அதையே பார்த்த வண்ணமிருந்தார். அவரது மனதில் திடீரென்று ஒரு நினைவுண்டாயிற்று. "ஓகோ! இது வஸந்தராவிடத்திலிருந்து நான் விடுவித்த பெண்ணைப் போலல்லவா இருக்கிறது! இது அவளே! சந்தேகமில்லை. இதை ஸகாராம் தன்னுடைய சகோதரியின் படமென்று சொல்லுகிறானே! அப்படியானால் வஸந்தராவினால் கொண்டுவரப்பட்ட பெண் ஸகாராம்ராவின் வேறொரு தங்கையாயிருப்பாளோ! அவளை நான் கால் நாழிகை நேரமே பார்த்திருந்தேனாயினும், அவளுடைய பேரழகும் வசீகரமான தோற்றமும் அவளிருந்த பரிதாபகரமான நிலைமையும் என் மனதில் என்றும் மாறாவிதமாகப் பதிந்து விட்டமையால் இதைக் கண்டவுடன் எனக்கு இவ்வளவு ஆசை உண்டாகிவிட்டது" என்ற பலவாறு தமக்குள்ளாகவே பேசிக் கொண்டார்.

அதன் அடியில் எவரது பெயராகிலும் எழுதப் பட்டிருக்கிறதா என்று அதை அவர் நன்றாகச் சோதனை செய்து பார்த்தார். அதில் எவ்விதமான குறிப்பும் காணப்படவில்லை ; அதை உற்று நோக்கிய வண்ணம் நெடுநேரம் இருந்தபின் அவர் அதைத் தமது பீரோவில் வைத்துப் பூட்டப் போகையில், அதன் கருமையான கண்கள் உண்மையில் உயிருடன் இருப்பவை போலக் காணப்பட்டன. ஆகையால் அதைத் திரும்பவும் ஒருமுறை பார்க்க ஆசை கொண்டவராய், தம்மை மறந்து அதன் முகத்தில் ஒரு முத்தமிட்டார். அடுத்த நிமிஷத்தில் தான் செய்த பைத்தியக்கார வேலையை நினைத்து வெட்கமடைந்தவராய், அவர் அதை பீரோவில் வைத்துப் பூட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/171&oldid=1233835" இலிருந்து மீள்விக்கப்பட்டது