156
வஸந்தமல்லிகா
வைத்திருந்த அபிமானத்தையும் ஆழ்ந்த காதலையும் கண்ட மல்லிகா, அடக்கவொண்ணா நன்றியறிதலைக் காண்பித்தவளாய், “இவைகளுக்கெல்லாம் நான் என்ன பதில் செய்யப் போகிறேன்?" என்றாள்.
"உன்னையே எனக்குக் கொடுத்து விட்டாயே! நீ இன்னம் பதில் வேறு செய்ய வேண்டுமா? அதைப் பற்றிக் கவலைப்படாதே. இவைகளை எடுத்துக் கொண்டு போய் ஜாக்கிரதையாக வை. நான் போய் மறுபடி வருகிறேன்" என்று சொல்லி விட்டு அவளிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டான்.
"இவர் இவ்வளவு காதலையும் அன்பையும் காட்டியும் என் மனம் கொஞ்சமாவது இளகலவில்லையே! இவர் மேல் கொஞ்சமும் ஆசை உண்டாகவில்லையே! என் மனம் என்ன பாழ்த்துப் போய் விட்டதா!" என்று நினைத்தவண்ணம் மல்லிகா மேன் மாடத்தில் இருந்த கிருஷ்ணவேணியிடம் சென்று நகைகளை அவளிடம் காட்டினாள். அவள் அவைகளைக் கண்டு பெரிதும் பிரமிப்பை அடைந்து, திகைத்து அப்படியே ஸ்தம்பித்துக் கால் நாழிகை நேரம் வரையில் மௌனமாக இருந்தபின், "இவைகளின் விலை பதினாயிரத்துக்கும் மேல் இருக்குமே! பீமராவ் லட்சப் பிரபுவாய் இருக்க வேண்டும்" என்றாள்.
"அது என்னவோ எனக்குத் தெரியாது; ஆனால், இதில் அவர் இவ்வளவு பணத்தைச் செலவழித்தது அநாவசியம். என் மனம் இவைகளை நாடவில்லை. சூது வைரமே நாடகத்துக்குப் போதுமானது" என்றாள் மல்லிகா.
"அடி மல்லிகா! உன்னைப் போன்ற அபூர்வமான பெண்களை நான் இதுவரையில் கண்டதே இல்லை. வைரங்களைக் கண்டு கூட உன் மனம் இளகவில்லையே! இது என்ன ஆச்சரியம்!" என்றாள் கிருஷ்ணவேணி.