164
வஸந்தமல்லிகா
அவர்கள் நாடக மேடையின் முன்புறமாக வெளியில் போக முடியாமல் போகவே, பின்புறத்தில் ஒரு வழியிருந்தாலன்றி, அவர்கள் நெருப்பிற்கு இரையாக வேண்டியதே முடிவாக இருந்தது. பின்புறத்தில் வழி ஏதாகிலும் இருக்கலாம் என்னும் எண்ணத்தோடு மோகனராவ் அவளைத் தூக்கிக் கொண்டு பின்புறத்தில் ஓடினார். எங்கும் புகையும் நெருப்புமாய் இருந்தமையால், போகும் வழியை அறிய மாட்டாமல், குறுக்கே இருந்த கயிறுகளிலும், மூங்கிற் கம்பங்களிலும், கட்டைகளிலும், பள்ளங்களிலும் தடுக்கி அவர் மல்லிகாவோடு விழுந்து எழுந்தார். அவ்விதம் தடுமாறிய வண்ணம் சசிக்கவொண்ணாத துன்பமடைந்து அவர் கொட்டகையின் கடைசிக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கு ஏதாகிலும் வழி இருக்குமோவென்று அவர் நோக்க, அவ்விடத்தில் கொட்டகை ஒரு சுவரில் போய் முடிவ டைந்தது. ஆனால், சுவருக்கும் கொட்டகைக்கும் இடையில் இரண்டு முழ அகலத்தில் இடைவெளி விடப்பட்டிருந்தது. அது சிறிய சந்தைப் போல் இருந்தது. அதுவரையில் அப்போது நெருப்பு எட்டாமலிருந்தது.
அவர்கள் அங்குச் சென்றவுடன் அந்த இடைவெளியின் வழியாக உள்ளே நுழைந்த குளிர்காற்று மல்லிகாவின் வெதுப்பப் பட்ட உடம்பில் படவே, அவள் தனது கண்களை விழித்துக் கொண்டு, "நான் இப்போது எங்கே இருக்கிறேன்?" என்றாள்.
குயிலோசை போன்ற அந்தக் குரலொலி அவரது காதில் பட்டவுடன், அவருக்குப் பழைய நினைவுகள் தோன்றின. "முன்னொரு நாள் இவளைச் சத்திரத்தில் விடுவித்தேன். இன்று நான் இவ்விடத்துக்கு வந்தது, இவளை இரண்டாம் முறை விடுவிப்பதற்குத்தான் போலிருக்கிறது. இதுவும் ஓர் அதிர்ஷ்டந்தான். இவளுடைய ஆபத்துச் சமயங்களில் இவளைக் காப்பாற்ற கடவுள் என்னையே பொறுக்கி எடுப்பதன் காரணமென்ன? இதில் ஏதோ அந்தரங்கமான கருத்து அடங்கியிருக்கிறது" என்று நினைத்தார். அவள் வாயைத் திறந்து பேசிய போது அவரது படத்திற்கு உயிர் வந்ததைப் போல ஓர் எண்ணம் அவரது மனதில் தோன்றியது. தாம் எதிர்பாராத விதமாக, அவள் தனது மார்பின் மீதிருந்ததைக் காண அவருக்கு ஒருவித லஜ்ஜை உண்டாயிற்று. அவள் திரும்பவும் கண்ணைத் திறந்து, "நாம் இன்னமும் கொட்டகையிலா இருக்கிறோம்" என்றாள்.