168
வஸந்தமல்லிகா
செயலாக ஓட்டின் மீது பார்க்க, இங்கு இருவர் விழுந்து கிடந்ததைக் கண்டு சந்தோஷத்தினால் பெரிதும் ஆரவாரம் செய்து அங்கிருந்தது யாவரென்பதை அறிய எண்ணி உரக்கக் கூவி பார்த்தனர். மறுமொழி கிடைக்கவில்லை . அவர்கள் இறந்திருப்பார்களோ என்று சந்தேகித்த ஜனங்கள் அங்கு ஏறிப் பார்க்க வேண்டுமென்னும் ஆவல் கொண்டனர். உடனே அவர்கள் குடம் குடமாக ஜலத்தைக் கொணர்ந்து கவிழ்த்து நெருப்பை அணைத்து அவர்கள் இருந்த இடத்திற்கு வழி செய்யத் தொடங்கினர். அதற்குள் வேறொருவன் அரண்மனைக்குள் ஓடி, ஓர் ஏணியை எடுத்து வந்தான். சிலர் நிரம்பவும் பிரயாசைப் பட்டு வழி செய்து கொண்டு, சுவரினருகில் சென்று ஏணியை அதன் ஓரத்தில் நிறுத்தினார்கள். வேறு சிலர் அதன் வழியாக ஏறிக் கூரையை அடைந்து நெருங்கிப் பார்க்க, அங்கு ஸஞ்சலாட்சியும், வேறொரு யௌவனப் புருஷரும் உச்சி மேட்டில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். காணவே, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்து போய் விட்டார்களோ என்று உற்றுப் பார்த்தனர். இருவருக்கும் நாடி மெதுவாக அடித்துக் கொண்டிருந்தது. ஆனால், இருவரும் பேச்சு மூச்சின்றி மெய்ம்மறந்து விழுந்து கிடந்ததாக ஏற்பட்டது.
உடனே அம்மனிதர் மெதுவாக இருவரையும் கீழே இறக்கி கொட்டகை இருந்த இடத்தை விட்டு வெளியில் கொணர்ந்தனர். அப்போது மல்லிகாவைத் தூக்கி வந்த பீமராவ் பெரிதும் வியப்படைந்தவனாய், "அவர் கலியாணபுரம் ஜெமீந்தாரல்லவா" என்றான். அதைக் கேட்ட ஜனங்களும் ஆச்சரியம் அடைந்தனர். இரண்டு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. ஒவ்வொன்றில் ஒவ்வொருவராக இருவரும் விடப்பட்டனர். மோகனராவ் இருந்த வண்டி அவரது ஜாகைக்கும், மல்லிகா இருந்த வண்டி கருந்தட்டான்குடிக்கும் போய்ச் சேர்ந்தன.