23-வது அதிகாரம்
மல்லிகாவின் மூன்றாம் கணவன்
நெருப்பினால் வெதுப்பப்பட்ட இருவரும் சௌக்கியமடைந்து தேறி தமது சுயநிலைமைக்கு வர ஒரு வாரமாயிற்று. மோகனராவ் தமது உணர்வைப் பெற்றவுடன் கேட்ட முதற் கேள்வி, "ஸஞ்சலாட்சி உயிரோடிருக்கிறாளா?" என்பதே. அவள் உயிரோடிருக்கிறாள் என்றும், அநேகமாய் சௌக்கியமடைந்து விட்டாள் என்றும் அறிந்த பிறகே, அவருக்கு உயிரும் நல்ல உணர்வும் தமது இயற்கையான மகிழ்ச்சியும் திரும்பின. தான் நன்னிலைமை அடைந்த மறுநாளே, அவள் இருந்த தெரு, வீட்டு இலக்கம் முதலிய விவரங்களை அறிந்து கொண்டு, அங்கு போய் அவளைப் பார்க்க ஆவல் கொண்டு அவர் கருந்தட்டான்குடிக்கு வந்தார்.
வந்தவர் கிருஷ்ணவேணியின் வீட்டை அடைந்து கதவைத தட்ட அதைத் திறந்த கிருஷ்ணவேணி அவரது முகத்தில் நெருப்பு சுட்டதனால் உண்டாயிருந்த வடுக்களைக் கண்டு, அவரே கலியாணபுரம் ஜெமீந்தாரென்பதை யூகித்துக் கொண்டாள். உடனே நாணமும் ஒருவித ஸந்தோஷமும் அடைந்தவளாய், மலர்ந்த முகத்தோடு அவரை நோக்கி, “வர வேண்டும், வர வேண்டும், ஸஞ்சலாட்சி சௌக்கியமடைந்து விட்டாள். மெத்தை யின் மேல் இருக்கிறாள். அவளுடைய உயிரைக் காப்பாற்றிய ஜெமீந்தாரவர்கள் தாங்கள் தானே?" என்றாள் கிருஷ்ணவேணி.
அதைக்கேட்ட ஜெமீந்தார் மறுமொழி கூறத் தயங்கி புன் சிரிப்போடு, "ஆம்; நான்தான் மோகனராவ்; அவளை நானா காப்பாற்றினேன்? சுவாமியல்லவா காப்பாற்றினார்" என்றார்.
உடனே கிருஷ்ணவேணி மோகனராவை நிரம்பவும் மரியாதையாக உபசரித்து உள்ளே அழைத்துக் கொண்டு போய் ஒரு நாற்காலியில் உட்காரச் செய்தாள். அவரது விஷயத்தில் அவளுக்கு