உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மல்லிகாவின் மூன்றாம் கணவன்

171

கிரு : புண்படவில்லை; நெருப்பின் ஜ்வாலையைத் தாங்க மாட்டாமல் தேகம் முழுதும் வெதும்பிப் போய் விட்டது. இப்போது சௌக்கியமாய் விட்டது. ஆனால், அவளுக்குண்டான இந்த ஆபத்தைப் போல உலகத்தில் எவளுக்கும் உண்டா யிருக்காது; இதோ நான் போய் அவளை அனுப்புகிறேன் என்று சொல்லியவண்ணம், மெத்தையின் மீது சென்றாள். அடுத்த நிமிஷம் மல்லிகா நாணத்தோடு கீழே இறங்கினாள்.

அவளது முகம் வெளுத்திருந்தது. வலது செவிக்கருகில் நெருப்புப் பொறிபட்டு , அவ்விடத்தில் வெண் சிவப்புப் புள்ளியாக ஒரு வடு இருந்தது. நெற்றிக்கு மேல் சில இடங்களில் தலைமயிர் பொசுங்கிப் போய், திரும்பவும் வளர்ந்து, சுருண்டு சுருண்டு நெற்றியில் விழுந்தது. அதனால் அவளது அழகு முன்னிலும் பன்மடங்கு அதிகரித்துத் தோன்றியது. அவர் வந்திருக்கிறார் என்பதைக் கேட்டவுடன் அவளுக்குண்டான ஆநந்தத்திற்கு அளவில்லை. தெய்வத்தைக் கண்டதைப்போல அவரிடத்தில் அவளுக்கு ஒருவித பக்தியும் விசுவாஸமும் பொங்கி எழுந்தன. அவள் தனது மனதிற்கொண்ட நன்றியறிதலின் பெருக்கு அவளது முகத்தில் நன்றாக ஜ்வலித்தது. அவ்வித நிலைமையிலிருந்த மல்லிகாவைக் காணவே, மோகனராவின் மனமும் பலவித எண்ணங்களைக் கொண்டு பொங்கியெழுந்தது. வாய் குழறிப் போயிற்று.

மல்லி : என்னுடைய உயிரைக் காப்பாற்றியது ஒன்று; அது போதாதென்று இப்போது என்னுடைய தேக ஸ்திதியைப் பற்றி விசாரிக்க வந்தது இன்னும் விசேஷமானது! ஆகா! தங்களுடைய உதார குணத்தை என்னவென்று சொல்லுவேன்! இவைகளுக் கெல்லாம் இந்த ஏழை என்ன பதில் செய்யப் போகிறேன்! தங்களுடைய பேருதவியால், நான் ஒரு சிறிய காயங்கூடப் பெறாமல், இப்போது உயிரோடிருக்கிறேன். இல்லாவிட்டால் இந்நேரம் இந்த உடம்பு சாம்பலாயிருக்கும் - என்று சொல்லியவண்ணம் அவரை வியப்போடு உற்று நோக்கி அவரது முகத்திலிருந்த தழும்புகளைக் கவனித்து,

"அடாடா! முகமே பொசுங்கிப் போய்விட்டதே! உடம்பு முழுதும் தீய்ந்து தோலுரிந்து போயிருக்கிறதே! மயிரெல்லாம் போய்விட்டதே! ஐயோ பாவம்! எனக்காக எவ்வளவு பாடுபட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/189&oldid=1233934" இலிருந்து மீள்விக்கப்பட்டது