பக்கம்:வசந்த மல்லிகா.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மல்லிகாவின் மூன்றாம் கணவன்

173

பிறகு படத்தைப் பார்க்கப் பார்க்க அவள் மீதுண்டான விருப்பம் காதலாகக் கனிந்து விட்டது. அதனால் அவர் பைத்தியம் கொண்டவரைப் போலானார். நாடகக் கொட்டகையில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு அவர் அவளை மணக்காவிட்டால், தமது உயிரையே விட்டுவிடுவதாகத் தீர்மானித்திருந்தார். அவளையடைவதில் தமது ஜெமீன் முழுவதும் போய்விடுவதாயிருந்தாலும், அதனால் விசனம் உண்டாகாதென அவர் மதித்தார். அவள் ஏழையாயிருந்தாலும், அவளையே தாம் மணக்க வேண்டுமென உறுதி செய்து கொண்டவராய் அன்று அவளிடம் வந்தார்.

"நான் சொல்வதிலிருந்து அது இன்னதென்பது உனக்கு விளங்கவில்லையா? ஆம்; எப்படி விளங்கப்போகிறது? நான் திடீரென்று சொல்லுவதால், உனக்கு அது தெரிய நியாயமில்லை. அதிருக்கட்டும்; நாம் முதலில் சந்தித்தது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்றார் மோகனராவ்.

அவரது வார்த்தைகளையும் முக வேறுபாடுகளையும் கவனித்த மல்லிகாவின் மனதில், ஒருவித ஸஞ்சலம் தோன்றியது; நாணமுற்ற அந்த மாது, "ஆம்; நினைவிருக்கிறது" என்றாள்.

உடனே மோகனராவ், "எனக்கு அது இப்போதே நடப்பதைப் போல இருக்கிறது. அதன் பிறகு தினம் நான் அதையே நினைத்துக் கொண்டிருந்தேன். கனவிலும் நினைவிலும் நீயே என் மனசில் தோன்றி நின்றாய். உன்னைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நான் எவ்வளவோ முயன்றேன். தீப்பற்றிய அன்றிரவு தற்செயலாகவே நான் உன்னைக் கண்டேன். முதலில் உன்னைக் கண்ட நாள் தொட்டு உன்னையே மணக்க வேண்டுமென்னும் ஆசை மாறாமல் என் மனசில் வேரூன்றி இருக்கிறது. நான் ஒரு பெரிய ஜமீனுக்கு எஜமானன் என்பது உனக்குத் தெரியும். எனக்குத் தகுந்த வேறொரு ஜெமீந்தாருடைய மகளைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஊரார் சொல்வதை நான் அசட்டை செய்துவிட்டேன். உன்னையே அடைய வேண்டுமென்று என் மனம் தாகப்படுகிறது. இனி நான் வேறு எந்த ஸ்திரீயின் முகத்தையும் பார்க்க மாட்டேன். இது ஸத்தியம்" என்று உறுதியாகவும் உருக்கமாகவும் கூறினார்.

அதைக் கேட்ட மல்லிகாவின் சந்திர பிம்பம் போன்ற முகம் வாட்டமடைந்தது. அவளது மனம் பட்ட துன்பம் அவளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/191&oldid=1233936" இலிருந்து மீள்விக்கப்பட்டது