180
வஸந்தமல்லிகா
ஆசையோடு அதை எடுத்துப் பார்த்தான். அது பவானியம்மாள்புரத்து ஜெமீந்தார் பரசுராம பாவாவினது இளைய மனைவியின் படம் என அறிந்தான். அதை ஸகாராமன் எடுத்துக் கொணர்ந்து, தனது பெட்டியில் வைத்திருந்ததை அவன் அதற்கு முன் பார்த்திருந்தவனாதலால் அதை அங்குக் காணவே அவனுக்கு நிரம்பவும் ஆச்சரியம் உண்டாயிற்று. "இந்தப் படம் இவ்விடத்திற்கு வர வேண்டிய காரணமென்ன?" என்று யோசனை செய்த வண்ணம் அப்படியே சிறிது நேரம் அசைவற்று நின்றான். "பணப் பைத்தியம் பிடித்த கிழவன். ஒருவேளை இதை இவருக்கு விற்றிருப்பானோ" என்ற சந்தேகம் உண்டாயிற்று. அதற்குப் போடப்பட்டிருந்த சட்டங்களில் ஒன்று கீழே கிடந்ததையும், அதன் துண்டுகள் அருகிலிருந்த அடுப்பிற் கிடந்ததையும் அவன் கண்டான். "இதென்ன மோகனராவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா! சட்டங்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு, இந்தப் படத்தை இப்படி தனியாக ஏன் எடுத்தார்?" என்று தனக்குள் அதிசயித்தான். அப்போது பீரோவின் மேலிருந்த வேறொரு காகித் மடிப்பு காற்றினால் பறந்ததைக் கண்டு அதையும் பீமராவ் ஆவலோடு எடுத்து அதை உற்று நோக்கினான். அது ஒரு தஸ்தாவேஜியாய் இருந்ததைக் காணவே அடக்க ஒண்ணாத ஆச்சரியமும் ஆவலும் கொண்டு, அவன் அதை விரைவாகப் படிக்க ஆரம்பித்தான். முதற் பக்கத்தைப் படிக்குமுன், அதுவே காணாமல் போயிருந்த பரசுராம் பாவாவின் மரணாந்த சாஸனமென்பதை அறிந்து கொண்டான். அவனது தேகம் வெடவெட என்று நடுங்க ஆரம்பித்தது. அவன் அதிக விரைவாக பத்திரம் முழுவதையும் ஐந்து நிமிஷத் தில் படித்தான். வஸந்தராவுக்கும், தானதருமங்களுக்கும் கொடுக்கப்பட்டவை போக, மிகுதியான இரண்டு கோடி ரூபாயும் ஜெமீன் கிராமங்கள் முதலிய ஸகல பொருட்களும் அவரது பேர்த்தி மல்லிகாவுக்கே கொடுக்கப்பட்டிருந்ததைக் கண்ட பீமராவ் ஆநந்தக் கூத்தாடினான்; தான் நினைத்த விதமே எல்லா விஷயமும் நிறைவேறியதை நினைத்துப் பெருங் களிப்படைந்தான்; தான் அவளை முதலில் மணந்த பிறகே, அந்த இரகசியத்தை அவளிடம் வெளியிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்; தானும் ஒரு பெருத்த ஜெமீந்தார் ஆவது நிச்சயமென்று எண்ணி எண்ணிப் பூரித்துப் புளகாங்கிதமடைந்து ஆநந்த சாகரத்தில் ஆழ்ந்தான்.