உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்காத் திருடன்

181

அவனது மனதில் கோடானுகோடி எண்ணங்கள் உதித்தன. அந்த சாஸனத்தை அவ்விடத்தில் வைத்து விடுகிறதா, அல்லது எடுத்துக் கொண்டு போய் விடுகிறதா, மோகனராவ் அதைப் படித்திருப்பாரோ என்று அவன் ஐந்து நிமிஷம் வரையில் பலவாறு யோசனை செய்தான். கடைசியாக ஒரு வித தீர்மானத்திற்கு வந்தான். அந்தப் பத்திரத்தில் கடைசிப் பக்கம் எழுதாமல் காலியாக விடப்பட்டிருந்தது. ஆகையால் அவன் அதை எடுத்து நெருப்பில் பிடித்து அது முக்கால் பாகம் வரையில் எரிந்தவுடன் அதை நெருப்பிற்கு வெளியில் இழுத்துப் போட்டு விட்டான். அது மிகுதியும் எரியாமல் அவிந்து போய் அவ்விதமே கிடந்தது. படத்தை பீரோவின் மேல் வைத்து விட்டு, அவன் சாஸனத்தை வெளியில் தெரியாவிதமாக தனது மடியில் சொருகிக் கொண்டு, ஒன்றையும் அறியாதவனைப்போல திரும்பவும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அதன் பிறகு சிறிது நேரத்தில் மோகனராவ் வந்து சேர்ந்தார். "ஓகோ பீமராவா! என்ன நீ கண்ணிலேயே படுகிறதில்லையே! கலியாண சந்தோஷமோ?" என்று புன்சிரிப்போடு மோகனராவ் அவனுடன் சம்பாஷிக்கத் தொடங்கினார்.

பீமராவ் விநயமாக, "எல்லாம் இவ்விடத்து தயவுதான். நீங்கள் ஸஞ்சலாக்ஷியின் உயிரைக் காப்பாற்றாவிட்டால், எனக்கு இந்த சந்தோஷம் எங்கிருந்து உண்டாகப் போகிறது?" என்றான்.

"அதிருக்கட்டும்; இதைப் பற்றி இதுவரையில் என்னிடத்தில் நீ ஏன் தெரிவிக்கவில்லை ? நீ வர வர நிரம்பவும் கபடியாய் விட்டாயே!" என்றார் மோகனராவ்.

"அப்படி ஒன்றுமில்லையே! என்னுடைய கலியாணத்தைப் பற்றி நானே சொல்லிக் கொள்ள வெட்கமாய் இருந்தது. தவிர, இதைக் கோனூர் மிட்டாதார் முதலியோர் அறிந்தால் என்னைப் பரிஹாசம் செய்வார்களென்று நினைத்து இதுவரையில் சொல்லாமல் இருந்து விட்டேன். அதற்காகவே இப்போது வந்தேன். மன்னிக்க வேண்டும்" என்று நயமாக மொழிந்தான் பீமராவ்.

"சரி; போனது போகட்டும். நீ அவளைக் கலியாணம் செய்து கொள்வதைப் பற்றி எனக்கு எவ்வளவு சந்தோஷம் என்பதை சரியானபடி வெளியிட முடியவில்லை. எப்போது முகூர்த்தம் பார்த்திருக்கிறாய்?" என்றார் மோகனராவ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/199&oldid=1233944" இலிருந்து மீள்விக்கப்பட்டது