182
வஸந்தமல்லிகா
"மணமென்றால் பணமென்று அர்த்தமல்லவா! பணம் கிடைத்தால் இந்த மாசத்திலேயே முடித்து விட வேண்டும்" என்றான் பீமராவ்.
"பீமராவ்! அதைப் பற்றி நீ கவலைப்படாதே; உனக்குத் தேவையான பணம் நான் தருகிறேன். கலியாணச் செலவு என்னுடையதாக இருக்கட்டும். ஆயிரம் ரூபாய் போதுமா?" என்றார் மோகனராவ்.
அதைக் கேட்ட பீமராவ் மிகுந்த நன்றியறிதலைக் காட்டி, "அவ்வளவு போதும்! தங்களுடைய உதாரகுணம் யாருக்கு வரும்! மேன்மைக்குணம் என்பது இந்த ஓர் இடத்திலேதான் இருக்கிறது" என்று பலவாறு அவரை ஸ்தோத்திரம் செய்தான். அதைக் கேட்டு நிரம்பவும் ஸந்தோஷமடைந்த மோகனராவ், சிறிது நேரங் கழித்து படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு, "பீமராவ்! ஓர் ஆச்சரியம் கேட்டாயா?" என்றார்.
பீம : என்ன அது?
மோக : இதோ இந்தப் படத்தைப் பார்த்தாயா? (படத்தை எடுத்துக் கொடுக்கிறார்).
பீம : (அதைப் பார்த்து) முகம் நிரம்ப அழகாயிருக்கிறது!
மோக : அவ்வளவுதானா? இதைப் பார்த்தவுடன் எவருடைய நினைவும் உனக்கு உண்டாகவில்லையா? நன்றாகப் பார். இது யாரைப் போல் இருக்கிறது.
பீம : (யோசனை செய்தவண்ணம்) இது யாருடையது? இன்னாரைப்போல் இருக்கிறதென்பது தெரியவில்லையே நீங்கள் சொல்லுங்கள்.
மோக : இதை உனக்குக் காட்டாமலே ஸகாராம்ராவ் இதை வைத்திருந்தாற் போல் இருக்கிறது. இறந்து போன அவருடைய தங்கையின் படமல்லவா இது? அவளை நீ பார்த்ததில்லையா?
பீம : (சற்றுத் தடுமாறி) ஆம்! ஆம்! அவளுடையதுதான். இப்போதுதான் உண்மை தெரிகிறது.
மோக : நான் 100ரூ. கொடுத்து இதை அவரிடத்தில் வாங்கினேன். அவர் 200ரூ. கேட்டிருந்தாலும் நான் கொடுத்திருப்பேன்.