உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்காத்திருடன்

183

பீம : ஏன் அப்படி?

மோக : இது இன்னும் யாரைப் போலிருக்கிறது? நன்றாகப் பார்.

பீம : (யோசனை செய்தவண்ணம்) வேறு யாரைப் போலிருக்கிறது? தெரியவில்லையே!

மோக : இவ்வளவுதானா உன்னால் கண்டு பிடிக்க முடியவில்லையா? அடிக்கடி இவளுடன் பேசிப் பழகுவதால் இவள் யாரென்று சொல்ல உன்னால் முடியவில்லையா? இது ஸஞ்சலாக்ஷியைப் போல இல்லையா?

பீம : (உற்றுப் பார்த்து) ஆம்; கொஞ்சம் ஒற்றுமை இருக்கிறது. ஆனால், கண்ணில் மாத்திரம் சிறிது வித்தியாசமிருக்கிறது.

மோக : உன்னுடைய கண்ணிலேதான் வித்தியாசம் இருக்கிறது. இது லஞ்சலாகதியின் படம் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகையினாலேதான் 100 ரூபாய் கொடுத்து இதை வாங்கினேன். ஆனால், இவள் உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போவதை அறிந்தவுடன், இதை நான் இனி வைத்துக் கொண்டிருப்பது தவறென்று நினைத்தேன்.

பீம : தங்களுடைய கண்ணிய புத்தியும் மேன்மைக் குணமும் யாருக்கு வரும்? ஸஞ்சலாக்ஷிக்கும் தங்களுக்கும் நடந்த சம்பாஷணை முழுதையும் அவள் என்னிடம் சற்று முன்பே தெரிவித்தாள்.

மோக : (தற்பெருமையோடு) நான் அவளை விட்டு வந்த உடன் செய்த முதற் காரியம் இதை எடுத்து சட்டங்களைக் கழற்றி நெருப்பில் போட்டதுதான். ஆனால் சட்டத்துக்கும் பலகைக்கும் மத்தியில் ஒரு வஸ்து இருந்தது.

பீம : (புன்சிரிப்போடு) என்ன வஸ்து? அது ஏதாவது கரன்ஸி நோட்டா?

மோக : இல்லை இல்லை. அதில் மரணாந்த சாஸனம் ஒன்று இருந்தது; பவானியம்மாள்புரம் ஜெமீந்தார் எழுதியது.

பீம : என்ன வேடிக்கையாக இருக்கிறதே!

மோக : (புன்சிரிப்போடு) பொய்யல்ல; இதோ நான் காட்டுகிறேன் பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/201&oldid=1232119" இலிருந்து மீள்விக்கப்பட்டது