உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

வஸந்தமல்லிகா

தனது நினைவை புத்தகத்தில் செலுத்த வேண்டுமென்று முயன்றது யாவும் பலிக்கவில்லை. அதில் ஒரு வரியைப் படிக்குமுன் அவளது மனம் எங்கேயோ சென்றது. பற்பல எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி அவளது மனதைத் தமது வசப்படுத்தின. கொட்டகையில் நெருப்புப் பிடித்த போது மோகனராவ் தனக்குச் செய்த பேருதவிகளும், அன்று காலையில் அவர் தன்னிடம் சொன்ன அன்பான சொற்களும், தன் மீது அவர் கொண்ட கடுங்காதல், கலியாணப் பிரரேபனை முதலிய யாவும் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் தோன்றி வருத்தின. தான் துக்கோஜிராவின் வீட்டில் துன்புற்றிருந்த காலத்தில் தனக்கும் வஸந்தராவுக்கும் நடந்த விருத்தாந்தங்களெல்லாம் நினைவுக்கு வந்தன. சமுத்திரக் கரையிலும், வடவாற்றங் கரையிலும், பங்களாவிலும் அவர் தன்னிடம் கூறிய காதல் மொழிகளும், அவர் தனக்குச் செய்த நன்மையான காரியங்களும், தன்னை மணப்பதாய்ச் சொல்லி வஞ்சகமாக தன்னை தஞ்சைக்கு அழைத்து வந்ததும், தன் மனதையும், காதலையும் ஒருங்கே கவர்ந்து தன்னை உயிரற்ற பாழுடலாக்கி தனது ஆயுட்காலத்தை நாசமாக்கி ஆராத் துயரத்தில் ஆழ்த்திய விஷயங்களும் அப்போதே நிகழ்வன போலத் தோன்றின. தான் தஞ்சைக்கு முதலில் வந்த தினத்தின் காலையில் கோனூர் மிட்டாதாரும், மோகனராவும் வஸந்தராவின் குணத்தைப் பற்றிப் பேசியதும், அதைக் கேட்டு தான் புறப்பட்டு வந்ததும், அதன் பிறகு நடந்த மாறுபாடுகளும் கண்களின் முன்பாக நின்றன. வஸந்தராவ் தன்னை வஞ்சிக்க நினைத்தது உண்மையானால், அவர் தமயந்தியை மணக்கப் போவதாக பத்திரிகையில் வெளியான வதந்தி எப்படிப் பொருந்தும் என்று அவள் சந்தேகித்தாள். அவர் துன்மார்க்க குணமுடையவராய் இருந்தால், அவர் வேறொருத்தியை மாத்திரம் மணப்பாரா என்று பலவாறு எண்ணமிட்டவளாய் வஸந்தராவின் நினைவும் வடிவமும் தன் மனதை விட்டு நீங்கப் பெறாதவளாய் மெய்ம்மறந்து உட்கார்ந்திருந்தாள்.

அந்தச் சமயத்தில் அங்கு தோன்றிய பீமராவ், "என்ன பலமாக யோசனை செய்கிறாய்?" என்று வினவிய குரலைக் கேட்ட மல்லிகா திடுக்கிட்டு, பீமராவ் வந்ததை உணர்ந்து தனது ஸுயநினைவை அடைந்து புன்சிரிப்பை பலவந்தமாகத் தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/206&oldid=1233950" இலிருந்து மீள்விக்கப்பட்டது