பக்காத் திருடன்
189
முகத்தில் உண்டாக்கிக் கொண்டு, “யோசனை என்ன இருக்கிறது. பொழுது போகவில்லை; புத்தகத்தைப் படிக்க முயன்றேன். அதற்குள் நினைவு எங்கேயோ போய்விட்டது. பைத்தியம் போல் உட்கார்ந்திருக்கிறேன்" என்றாள்.
"நீ ஏதாவது யோசனை செய்தால் உனக்கு எவ்விதமான மனக்குறையோ என்று என் மனம் வருந்துகிறது. உன் முகத்தைக் காண சிறிது தாமசமானால், என் மனம் பதைக்கிறது. நான் என்ன செய்வேன்! அடிக்கடி நான் உன்னை உபத்திரவிப்பதனால் உனக்குக் கோபமுண்டாகுமோ என்னும் அச்சம் ஒரு பக்கத்தில் என்னை வதைக்கிறது; காதலின் உரமே உரம்! அது மனிதனை என்ன பாடு படுத்துகிறது! உன் விஷயத்தில் நான் கொண்ட ஆசையும், நினைக்கும் நினைவுகளும், படும் பாடுகளும் உள்ளபடி உனக்கு எப்படித் தெரியப் போகின்றன. உன்னை நினையாமல் ஒரு நாளில் ஒரு நிமிஷங்கூடக் கழிந்ததில்லை. ஆகா! உன் மேல் நான் கொண்ட பிரேமையில் பத்தில் ஒரு பாகம் நீ என் மேல் கொண்டால் என்னைப் போன்ற பாக்கியவான் உலகத்தில் இருக்கவே மாட்டான்" என்று உருக்கமாக மொழிந்தான் பீமராவ்.
மல்லி : ஏன் இன்றைக்கு என்மேல் இவ்வளவு வருத்தம்? நான்தான் என் மனநிலைமையை முன்னமேயே தெரிவித்து விட்டேனே! என்னுடைய ஆசையை எல்லாம் வேறொருவர் கவர்ந்து கொண்டு போய் விட்டமையால், எனக்கு மற்றவர் எவர் மேலும் விருப்பம் உண்டாகவில்லை என்று சொன்னேனே! நீர் என் மேல் வைத்திருக்கும் ஆசைக்கும் அளவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது; நீர் எவ்வளவோ உண்மையாகத்தான் நடந்து கொள்ளுகிறீர். ஆனால், நன்றி கெட்டவளான என் மனசில் மாத்திரம் உண்மையான பிரியம் ஏற்படவில்லையே! நான் என்ன செய்வேன் - என்றாள்.
பீம : எது எப்படி இருந்தாலும் நம்முடைய கலியாணத்தை இனி தாமதித்து வைப்பது கூடாது. எப்படியாவது அதற்கு நீ சம்மதித்தே தீர வேண்டும்.
மல்லி : அதற்குத்தான் நான் முன்னமேயே சம்மதித்தேனே. அதைப்பற்றி மறுபடியும் கேட்பதேன்?