உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

வஸந்தமல்லிகா

பீம : நீ என்னைக் கலியாணம் செய்து கொள்ளப்போகிறாய் என்று மனசில் நினைப்பது மாத்திரம் என் மனசிற்குத் திருப்தி யைத் தரவில்லை. அதிசீக்கிரம் முகூர்த்தத்தை நடத்தினாலன்றி என் மனசின் துன்பம் அதிகரிக்குமேயன்றி குறையாது. கலியாணம் முடிந்து விட்டால் உனக்கு என் மேல் ஆசை உண்டாகும்படி நான் செய்கிறேன். இன்னம் 10, 12 நாளைக்குள் ஒருமுகூர்த்த நாள் இருக்கிறது. அதில் கலியாணத்தை நடத்த ஏற்பாடு செய்கிறேன். அதற்கு உன்னுடைய சம்மதியைப் பெற வந்தேன். நீ யாதொரு தடையும் சொல்லாமல், 'சரி' என்று சொல்ல வேண்டும்.

மல்லி : என்னுடைய உண்மையான அபிப்பிராயத்தைக் கேட்டால், என் மனப்பிணி ஒருவாறு நீங்கும் வரையில் பொறுப்பது நலமாய் இருக்குமென்று சொல்லுவேன். கூடாதென்று வற்புறுத்தினால், உம்முடைய வார்த்தையைத் தடுத்து மறுமொழி சொல்ல எனக்குத் துணிவுண்டாகவில்லை.

பீம : (நயமாக) கண்ணே ! நான் சொல்வதைக் கேள். உனக்கு நன்மை உண்டாகும். நீ நிரம்பவும் சுகப்படுவாய்; நம்முடைய கலியானம் விரைவில் நடப்பது, உன் விசனத்தை விலக்க ஒரு மருந்தாகும். நீ அரை மனதோடு சொல்லக் கூடாது. முழு மனசோடு 'ஆகட்டு' மென்று சொல்ல வேண்டும்.

மல்லி: (சற்று யோசனை செய்து) உமக்கு இஷ்டமானால் செய்யலாம்.

பீம : எனக்கு இஷ்டமில்லாமலா நான் இவ்வளவு தூரம் பாடுபடுகிறேன். கரும்பு வேண்டாம் என்று எவனாகிலும் சொல்வானா? உன்னையே நான் என்னுடைய உயிராக மதித்திருக்கிறேன். நீ இல்லாமல், இனி அரை நாழிகை நேரமும் நான் தனித்திருக்க மாட்டேன். நான் போய் விவாகத்துக்கு ஆக வேண்டிய காரியங்களைச் செய்கிறேன். போகலாமா?" என்றான். அவள், "உமது இஷ்டம் போலச் செய்யலாம்" என்றாள்.

உடனே பீமராவ் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு, வெளியிற் போய்த் தனது எண்ணம் பூர்த்தியாகப் போவதைப் பற்றி ஆநந்த பரவசம் அடைந்தவனாய், தனது புது வீட்டிற்கு வந்து உள்ளே நுழைந்தபோது அங்கு ஒரு புது விசேஷத்தைக் கண்டு, அதை உற்று நோக்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/208&oldid=1233952" இலிருந்து மீள்விக்கப்பட்டது