இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பக்காத் திருடன்
191
அவன் குடியிருந்த வீட்டிற்கு அடுத்த வீடு காலியாக இருந்தது. அதில் அப்போதுதான் யாரோ சிலர் குடி புகுந்ததை அவன் கண்டான். முதலில், ஒரு வண்டியில் பெட்டிகள் படுக்கை முதலிய சாமான்கள் வந்திறங்கின. அடுத்த நிமிஷத்தில் வேறொரு வண்டியில் ஒரு வேலைக்காரியும், அவளது எஜமானியும் வந்திறங்கினார்கள். அந்த எஜமானி மகாராஷ்டிர ஸ்திரீயாகையால் அவள் துப்பட்டியால் கால் முதல் தலைவரையில் தன்னை மூடிக் கொண்டிருந்தாள். ஆனால், நடை, உயரம், பருமன் முதலியவற்றிலிருந்து, அவள் தமயந்திபாயைப் போல் அவனது பார்வைக்குக் காணப்பட்டாள். அவன் எவ்வளவு முயன்றும், அவள் உண்மையில் இன்னாளென்பதை அறிந்து கொள்ளக் கூடவில்லை . சிறிது வாசலில் நின்று தத்தளித்த பிறகு பீமராவ் தனது ஜாகைக்குள் நுழைந்தான்.