உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



194

வஸந்தமல்லிகா

ராவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை அவள் கண்டாள். உடன் அவள் தனது செவியை அதில் வைத்து, அவர்களது சம்பாஷணையை உற்றுக் கேட்டாள்.

ஸகா : (இரகசியமாக) பீமா! வாசற்கதவை நன்றாகத் தாளிட்டாயா?

பீம : (புரளியாக) தாளிட்டேன்.

ஸகா : (நான்கு பக்கங்களிலும் திரும்பிப் பார்த்து ஆச்சரியத்தோடு) இந்த வீடு பெரிய மனிதருடைய வீட்டைப் போல் இருக்கிறதே! படங்கள், பீரோக்கள், நாற்காலிகள், மேஜைகள், பலே! எவ்வளவு ஏற்பாடாக இருக்கிறது! நீ பெரிய பணக்காரன் ஆய்விட்டாயே! அநாதையாய் அகப்பட்டவனைப் போலவா இருக்கிறாய்.

பீம : (சிறிது கோபமடைந்து) அதெல்லாம் இருக்கட்டும். இங்கே உம்மை யார் வரச் சொன்னது?

ஸகா : நான் இங்கே வரக் கூடாதா? நீ வீட்டிற்கே வருவதில்லை என்று, உன்னை இவ்விடத்திலாவது பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். கலியாணபுரம் ஜெமீந்தார் விஷயத்தில் நான் சொன்னதை மறந்து விட்டாயே! உன்னுடைய காரியமும், உன்னுடைய தமாஷாகவும், உன்னுடைய விளையாட்டுகளுமே உனக்குச் சரியாய் இருக்கின்றன.

பீம : நீர் சொன்னதை நான் மறக்கவில்லை . அதற்குத் தகுந்த ஏற்பாடு செய்து கொண்டுதான் இருக்கிறேன். மற்றபடி நான் எப்படி இருந்தால் உமக்கென்ன?

ஸகா : மோகனராவ் எனக்குக் கொடுக்க வேண்டிய கடன் இப்போது ஒரு லட்சம் ஆய்விட்டது. இன்னம் பல செலவுகளைச் செய்யும்படி அவரைத் தூண்டிவிட்டு மேலும் கடன் வாங்கச் செய்தால் ஜெமீன் கூடிய சீக்கிரம் என் வசமாகும். எல்லாம் கடைசியில் உனக்குத் தானே வரப் போகிறது. நீ இப்படி அசிரத்தையாய் இருந்தால் காரியம் எப்படிக் கைகூடும்?

பீம : இப்படி அவசரப்பட்டால் காரியம் எப்படி கைகூடும்? நான் தினந்தோறும் அவரிடத்தில் நூறு ஆயிரம் பதினாயிரம் இப்படி ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எல்லாம் தானாக நிறைவேறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/212&oldid=1233956" இலிருந்து மீள்விக்கப்பட்டது