சுவர்க்கோழி
195
ஸகா : அப்படியானால் சரி; நீ அவ்வளவு பணத்தையும் என்ன செய்கிறாய்? எல்லாவற்றையும் தொலைத்து விட்டாயா? ஏதாவது சேர்த்து வைத்திருக்கிறாயா?
பீம : எல்லாவற்றையும் ஆற்றில் எறிந்து விட்டேன். எங்கே போட்டால் உமக்கென்ன? நீர் என்னுடைய செலவுக்கு ஒரு காசு கூடத் தருகிறதில்லை.
ஸகா : நீ சம்பாதிப்பதிலேயே எவ்வளவோ மிகுதிப்படுமே! என்னிடத்திலிருந்து வேறே பணம் வாங்கி வீணாக்க வேண்டுமா? என்னவோ வர வர உன்னுடைய புத்தி இப்படிக் கெட்டுப் போய் விட்டது. அடே பீமா! நாடகம் ஆடும் பெண்களின் வீடே கதியாக இருந்தால் பணம் ஏன் மிஞ்சும்? யாரோ ஸஞ்சலாக்ஷியாம். அவளைக் கட்டிக் கொண்டு அழுகிறாயாமே? வீணாய்க் கெட்டுப் போகாதே; அவர்கள் பணத்தோடு உன்னுடைய உயிரையும் உறிஞ்சி விடுவார்கள். நான் சொல்வதைக் கேள். வீணாகக் கெட்டுப் போகாதே!
பீம : (கோபத்தை அடக்கிக் கொண்டு) கெட்டுப் போகவில்லை; அப்படியே விட்டு விடுகிறேன். அதிருக்கட்டும். வஸந்தராவிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா?
ஸகா : அவர் பட்டணத்திலேதான் இருக்கப் போகிறாராம். உடம்பு சௌக்கியமாய் இருக்கிறதாம். அவருக்கும் ஆயிரக்கணக்கில் பணம் அனுப்பிக் கொண்டே இருக்கிறேன். அந்தப் பைத்தியக்காரி மல்லிகா ஆற்றில் விழுந்து உயிரை விடாமல் இருந்தால், இத்தனை பணமும் நம்முடையதாயிருக்கும்.
பீம : போன விஷயத்தைப் பற்றிப் பேசுவதில் என்ன லாபம்? அவள் செத்துப் போய்விட்டாள். தவிர, அவள் பேரில் எழுதப்பட்ட சாஸனமும் அகப்படவில்லை. அப்படியிருக்க, அவள் உயிரோடிருந்தாலும் அதனால் பயனில்லை.
ஸகா : அவள் மட்டும் உயிரோடிருந்தால், சாஸனத்தை எப்படியாவது கண்டு பிடித்திருக்கலாம். பரசுராமபாவா கடைசியாக வஸந்தராவுக்கு எழுதிய கடிதத்தில், வேறொருவருக்கு எல்லாவற்றையும் தாம் எழுதி வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறாரே! என்ன இருந்தாலும் நமக்குச் சேர வேண்டிய பொருளை வஸந்தராவ் இவ்விதம் அழிப்பதைக் காண எனக்கு வயிறு எரிகிறது.