26-வது அதிகாரம்
கடற்கரையில் கடும் போர்
மறுநாள் காலையில் மல்லிகாவும் கிருஷ்ணவேணியும் மேன் மாடத்தில் உட்கார்ந்திருந்தனர். அப்போது கிருஷ்ணவேணி, "என்னிச்சைப்படி விடுவதாயிருந்தால், இந்தக் கலியாணத்தை நான் எவ்வளவு சிறப்பாக நடத்துவேன் தெரியுமா? வெளியில் தெரியாமல் இப்படி இரகஸியமாக நடக்கும் ஏழைக் கலியாணமெல்லாம் கலியாணத்தில் சேர்ந்ததேயல்ல. பெண்கள் தங்களுடைய கலியாணத்தில் உல்லாஸமாக இல்லாவிட்டால், வேறு எப்போதுதான் அவர்கள் சந்தோஷப்படப் போகிறார்கள்?" என்றாள்.
மல்லி : என் மனசுக்குக் கலியாணமே பிடிக்கவில்லை . பீமராவின் உபத்திரவத்தைப் பொறுக்க முடியாமல், இதற்கு இணங்கினேன். அதிக டம்பம் செய்வது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
கிருஷ்ண : நீ மகா அபூர்வமான பெண்ணாக இருக்கிறாயே. எல்லாவற்றிலும் நிதானமாக கலியாணத்தைக் கூட நீ அலட்சியமாக மதிக்கிறாயே! எனக்குக் கலியாணம் நடப்பதாயிருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? அந்த ஆநந்தத்தினால் அப்படியே குதிக்க மாட்டேனா! ஆனால், பெரிய மனிதருடைய வீட்டுப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள். எங்களைப் போன்ற ஏழைகளுக்கு அற்ப காரியத்துக்கெல்லாம் சந்தோஷம் அதிகம்.
மல்லி : இந்தக் கலியாணம் உன்னுடையதாக இல்லாமல் போயிற்றே என்பதுதான் எனக்கு விசனமாக இருக்கிறது.
கிரு : ஏன்?
மல்லி : இது உன்னுடைய கலியாணமாயிருந்தால், நீ மணக்கோலத்தில் அழகான யௌவன மணமகளாய் இருப்பாய்;