உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

வஸந்தமல்லிகா

கலியாணம் செய்து கொண்டால், அதனால், அன்பும், ஆசையும், காதலும், சுகமும் உண்டாக வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது காசைக் கொடுத்து தேளைக் கொட்ட விட்டுக் கொள்வதைப் போன்றதே. பெண்ணின் மனம் ஒன்றுமற்ற பாழாயிருந்தால், அவளை அடைவது தீராத துயரையல்லவா தரும். நான் உண்மையை உள்ளபடி சொல்லுகிறேன். கோபிக்கக் கூடாது? யோசனை செய்யச் செய்ய, இந்தக் கலியாணத்துக்கு யான் ஏன் இசைந்தேன் என்று என் மனம் என்னை ஓயாமல் கண்டிக்கிறது. நான் என்ன செய்வேன்?

பீம : இதனால் உனக்குச் சுகமில்லை என்று நினைத்து வருந்துகிறாயா?

மல்லி : என்னைப் பற்றிய கவலையே இல்லை. யோசனை எல்லாம் உங்களைப் பற்றியதே. என்னிடத்தில் இவ்வளவு ஆசை வைத்த உங்களுக்கு இந்தக் கலியாணத்தினால் கொஞ்சமேனும் சுகம் உண்டாவதாயிருந்தாலும் கவலையில்லை. அந்த ஆறுதல் கூட இராதே. என்ன செய்கிறது? ஆகையால் (இழுப்பு )

பீம : ஆகையால் என்ன?

மல்லி : ஆகையால், என்மேல் தயவு செய்து, உங்கள் அன்புக்குப் பாத்திரமில்லாத என்னை விலக்கித் தள்ளி விடுவதே உத்தமமான காரியம்; என் மேல் இரக்கங் கொள்ளுங்கள் - என்று கெஞ்சத் தொடங்கினாள்.

அதைக் கேட்கவே அவனது முகம் மாறுதலடைந்தது. விசனம் மனதில் குடி கொண்டது. அவன் தனது மடியிலிருந்த சாஸனத்தைத் தொட்டுப் பார்த்தான்; கடைசியாக, அவள் தனது வலையிலிருந்து தப்பிப் போய்விடுவாளோ என்றும், அவ்வளவு ஐசுவரியமும் தனக்கு இல்லாமல் போய்விடுமோ என்றும் நினைத்து வருந்தினவனாய் அவளை அன்போடு நோக்கி, "உன்மேல் இரக்கமா கொள்ள வேண்டும்? அந்த இரக்கம் உன்னிடத்தில் மாத்திரம் இல்லையா? என்னுடைய உயிரும் மூச்சும் எனக்கு எவ்வளவு இன்றியமையாதவைகளோ அவைகளைக் காட்டிலும் அருமையானவளான உன்மேல் நான் ஆசை வைக்காமல் இருக்க முடியுமா? என் அருமைச் செல்வமே! உன்னைத் தள்ளியா விடுகிறது? நீதான் என்னைத் தள்ளி விலக்கப் பார்க்கிறாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/230&oldid=1234011" இலிருந்து மீள்விக்கப்பட்டது