பக்கம்:வசந்த மல்லிகா.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சகத்தை வென்ற வஞ்சி

215

தம : ராத்திரி இவ்வளவு அகாலத்தில் நான் வந்து உங்களை உபத்திரவிப்பதைப் பற்றி மன்னிக்க வேண்டும். நிரம்பவும் அவசரமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும். ஆகையால், நான் இப்போதே வர நேர்ந்தது. தவிர, நாளைக்கு உனக்குக் கலியாணம் நடத்த நிச்சயித்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அது நிஜந்தானா?

மல்லி : (யோசனையோடு) ஆம்! நிஜந்தான்.

தம : (புன்சிரிப்போடு) பீமராவுக்கும் உனக்கும் தானே?

மல்லி : ஆம்!

பீம : (தடுமாற்றத்தோடு) சொல்லப் போகும் விஷயம் ரகஸியமானதாக இருந்தால் நான் வெளியில் போய்விடுகிறேன்.

தம : (அலட்சியமாக) இல்லை , இல்லை . அப்படி ரகசியம் ஒன்றும் இல்லை. (பரிகாசமாக) மல்லிகா நாளைக்கு உம்மு டைய மனைவியாகப் போகிறாள். இனி உமக்குத் தெரியாத ரகசியமும் உண்டா ? போக வேண்டாம். இருக்க வேண்டும். (மல்லிகாவை நோக்கி), வேறொன்றும் இல்லை. நான் இரண்டொரு சந்தேகங்களைப் பற்றிக் கேட்கிறேன். நீ அவைகளை நிவர்த்திக்க வேண்டும். உன்னுடைய நன்மையைக் கருதியே கேட்கிறேன். வித்தியாசமாக நினைக்க வேண்டாம்.

மல்லி : (சிரித்த முகத்தோடு) இல்லை , இல்லை . தெரிவிக்கலாம்.

தம : இந்த நாடகத்தில் சேர்ந்தவர்களுக்கெல்லாம் உண்மைப் பெயர் ஒன்றும், கொட்டகைப் பெயர் வேறொன்றுமாக இருப்பது வழக்கமல்லவா. கொட்டகையில் உன்னை ஸஞ்சலாக்ஷி என்று சொல்லுகிறார்களே. உனக்குச் சொந்தப் பெயர் ஒன்று உண்டல்லவா?

மல்லி : (திகைத்து) ஆம்.

தம : அப்படியானால், அது இன்னதென்று பீமராவுக்குத் தெரிவித்தாயா?

மல்லி : இல்லை.

தம : (பீமராவை நோக்கி) நீர் வேறுவிதத்திலும் அதைத் தெரிந்து கொள்ளவில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/233&oldid=1234019" இலிருந்து மீள்விக்கப்பட்டது