6
வஸந்தமல்லிகா
பருவமடைந்த அழகிய ஒரு சிறுமி உள்ளே நுழைந்தாள். அவ்வாறு வந்தவளது தோற்றத்திற்கும் மற்ற இருவரின் தோற்றத்திற்கும் யாதொரு சம்பந்தமுமில்லாமலிருந்தது. மல்லிகா ஒர் இராஜஸ்திரியைப் போலவும், மற்றவர் அவளுக்குப் பணிவிடை செய்யும் சேடியரைப் போலவும் காணப்பட்டனர். மல்லிகாவின் காந்தியும், கட்டழகும், யெளவனமும், முகவசீகரமும், கம்பீரமும் காண்போது மனதைக் கவர்ந்தன.
அவ்வாறு நுழைந்த மடமங்கை உட்புகுந்து குடத்தை அறைக்குள் வைத்தபின் கூடத்திற்கு வந்து, அன்பும் புன்ன கையும் அரும்பிய முகத்தோடு கமலாவை நோக்கி, "அக்கா! இவ்வளவு நேரம் வைத்தால் கண்ணும் கழுத்தும் நோகுமே. இன்றைக்கு இவ்வளவோடு நிறுத்துங்களேன். கொஞ்சம் கொஞ்சமாக ஆகட்டுமே; என்ன அவசரம்? பொழுதும் போய் விட்டதே?" என்றாள்.
கமலா : மல்லிகா! இப்போதுதான் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவள்போலப் பேசுகிறாயே! தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வந்துவிட்டதென்பதை மறந்துவிட்டாயா? அதற்குள் பாவாடைகளும் ரவிக்கைகளும் தைத்தாக வேண்டாமா? உனக்கு நல்ல உடைகள் ஏராளமாக இருப்பதால் உனக்கு இதில் கவலையே இல்லை.
ஸீதா : (ஆத்திரமாக) அப்பா வருவதற்குள் இவைகளையெல்லாம் எடுத்துவிட்டு வீட்டைச் சுத்தி செய்ய வேண்டுமென்று சொன்னதற்குத்தான் நீ இவ்வளவு சீக்கிரமாக வந்தாயோ?
கமலா : ஸீதா! நீ சுத்த முட்டாள்! இவளுடைய அழகென்ன அற்பமானதா! தன்னுடைய அலங்காரத்தைக் குனிந்து நிமிர்ந்து பார்த்துக் கொண்டு, குலுக்கி மினுக்கி நடப்பதற்கு நேரமாகாதோ?
ஸீதா : இவள் கோணிக் குலுக்கி நடந்ததில் கழுத்திலும் இடுப்பிலும் சுளுக்குண்டானதே யொழிய எந்தப் புருஷனும் இவளைக் கண்டு மயங்கவில்லையே! ஏன் இப்படி வீண் பாடுபட வேண்டும்?
என்று அவ்விரு ஸ்திரீகளும் பொறாமையையும் ஆத்திரத்தையும் காட்டிய மொழிகளைக் கூறி மல்லிகாவை ஏளனம் செய்தார்கள்.