பேய்களும் பெண்மானும்
7
அந்தப் பெண்மணி, அவர்களது கடுமொழிகளை மனதில் வாங்காமல், புன்சிரிப்பும், பொறுமையும் ஜ்வலித்த முகத்தோடு, "ஸீதா! நான் சீக்கிரமாக வரவேண்டுமென்னும் எண்ணத்தோடு குடத்தை எடுத்துக் கொண்டு வேகமாய் நடந்து வந்தேன். அவசரத்தில் காலில் ஒரு கல் அடிபட்டது; உடனே இரத்தம் பெருகியது; நொண்டிக்கொண்டு வந்து சேர்ந்தேன். இதோ பார் காயத்தை" என்று தனது காலிலிருந்த ஒரு காயத்தைக் காண்பித்துவிட்டு, அங்கே கிடந்த துணித் துண்டுகளையும் மற்ற பொருட்களையும் எடுத்து ஒழுங்காய் வைக்கத் தொடங்கினாள். அப்போது தனது கையில் அகப்பட்ட ஒரு வெல்வெட்டு ரவிக்கையின் ஒரு பாகத்தை அவள் எடுத்து அதில் தனது வலது கரத்தைப் புகுத்தி அதை அவர்களுக்குக் காட்டி, "அக்கா! இது எனக்கு எப்படி இருக்கிறது பாருங்கள்" என்று குதூகலத்தோடு கேட்டாள்.
பளபளவென மின்னும் சுவர்ணத்தைப் போலிருந்த அந்த மின்னாளின் நிறத்திற்கு அந்த இரவிக்கை மிகவும் பொருந்தியிருந்தமையால், அவளது அழகு முன்னிலும் ஆயிரமடங்கு சிறந்து தோன்றியது. அதைக் கண்டவுடன் கமலாவுக்கு உண்டான பொறாமைக்கு அளவேயில்லை; உடனே அவளைப் பார்த்து "வெறும் உடம்பின் அழகில் மயங்கி வந்ததனால் காலில் கல் அடித்தது. இன்னும் வெல்வெட்டு ரவிக்கை போட்டுக் கொண்டால் பிறகு குடத்துக்கும் ஆபத்து வந்துவிடும். அப்புறம் புதுக்குடம் வாங்க அப்பாவிடம் இப்போது கையில் பணங்கூட இல்லை" என்றாள் கமலா.
"மல்லிகா எவ்வளவோ பாடுபட்டுப் பார்க்கிறாள். ஒரு பாவியாவதும் அவளைக் கலியாணம் செய்து கொள்ள வர மாட்டேனென்கிறான்! வந்திருந்தால் அவளுக்கு இப்போது தீபாவளிக்கு வெல்வெட்டு ரவிக்கை வாங்கிக் கொடுத்திருப்பான்" என்று குத்தலாக மொழிந்தாள் ஸீதா.
இவ்விதமாக அவ்விரு மகளிரும் இடித்திடித்துப் பேசிய மொழிகள் மல்லிகாவின் மனதில் சுருக்கென்று தைத்தனவாயினும், அவள் தனது வருத்தத்தை அடக்கி முகத்தில் எவ்வித மாறுபாடும் காட்டாமல் உடனே அந்த இரவிக்கையைக் கழற்றிவிட்டு யாவற்றையும் ஒன்றாய்ச் சேர்த்தாள்.