உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29-வது அதிகாரம்

சக்கிலியர் சாமிக்கு செருப்புப் பூசை

னது அந்தரங்கமான கருத்தை எல்லாம் தமயந்தி பாயி வெளிப்படுத்தி தன்னை அயோக்கியன் என்று ருஜுப்படுத்திய நாள் முதல், ஸகாராம்ராவ் அவளிடத்தில் பெருத்த அச்சங் கொண்டான். அவளைக் காணும் போதே அவனுக்குப் பேயைக் காண்பதைப் போல் இருந்தது. புதிதாக வந்த ஜெமீந்தாரினி தமயந்தியின் கைக்குள் இருப்பதால், தான் தமயந்தியின் சொற்படி நடக்காவிடில், தனது ஸர்வாதிகாரி உத்தியோகத்தை அவள் ஒழித்து விடுவாள் என்று நினைத்து அவன் பெரிதும் கவலை அடைந்தான். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சாஸனத்தைப்பற்றி தாங்கள் உத்தரவிடும் வரையில், எவரிடத்திலும் உண்மையை வெளியிடக் கூடாதென்று அவனிடம் தமயந்தி கண்டிப்பாகத் தெரிவித்திருந்தாள். அவ்விதமே செய்வதாக அவனும் ஒப்புக் கொண்டிருந்தான். மல்லிகா ஆற்றில் விழுந்திருக்கவில்லை என்றும், உயிரோடிருப்பதாயும், மூன்றாம் நாள் அவள் பவானியம்மாள்புரத்திற்குப் போவதாயும், துக்கோஜிராவுக்கு ஸகாராம் ராவ் ஒரு கடிதம் எழுதியனுப்ப தமயந்தி ஏற்பாடு செய்தாள்.

அன்று மாலை பவானியம்மாள்புரத்து தபால்காரன் அப்பாயி நாயுடு என்பவன், தனது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த துக்கோஜிராவிடத்தில் போய், மேலே குறிக்கப்பட்ட கடிதத்தைக் கொடுத்தான். அதை வாங்கிப் படித்த துக்கோஜிராவ் திடுக்கிட்டு ஒருவிதமான மனோவேதனை அடைந்தவனாய் விரைவாக எழுந்து வீட்டிற்குள் போய் இயந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருந்த கமலாவையும், ஸீதாவையும் நோக்கி, "கமலா! அதிசயத்தைக் கேட்டாயா! மல்லிகா சாகவில்லையாமே! உயிரோடு இருக்கிறாளாமே! இதென்ன நிஜமாயிருக்குமா? அல்லது, இதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/257&oldid=1234103" இலிருந்து மீள்விக்கப்பட்டது