சக்கிலியர் சாமிக்கு செருப்புப் பூசை
243
என்றும், அவர்கள் முகத்தில் எப்படி விழிக்கிறதென்றும் எண்ணிக் கிலேசமடைந்தவளாய், பிரம்மாண்டமான அந்த மாளிகைக்குள் நுழைந்தாள். பெருத்த அரண்மனையைப் போலிருந்த அந்த அழகிய பங்களாவைக் கண்ட கிருஷ்ணவேணி பெரிதும் வியப்படைந்தவளாய், "மல்லிகா! இவைகள் எல்லாம் உண்மையாகவே உன்னைச் சேர்ந்து விட்டனவா?" என்றாள்.
"ஆம்; உண்மையில் அவளுடையவைகள்தான்" என்றாள் தமயந்தி.
அதைக் கேட்ட கிருஷ்ணவேணி திக்பிரமை கொண்டு தன்னை முற்றிலும் மறந்தாள். மூவரும் நெடு நேரம் வரையில் அந்த மாளிகைக்குள்ளும் வெளியிலும் சுற்றிப் பார்த்துவிட்டு, அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு சவுக்கண்டியில் இறங்கினர். அவர்களுக்குப் போஜனம் முதலியவை நிரம்பவும் ரம்மியமாக நடந்தேறியபின், பிற்பகலில் தமயந்தி ஸகாராம்ராவை அழைத்து துக்கோஜிராவையும், அவனது புதல்வியரிருவரையும் வருவிக்கும்படிச் சொல்லி அனுப்ப, கால் நாழிகையில் துக்கோஜி ராவ், கமலா, ஸீதா ஆகிய மூவரும் மாளிகைக்குள் நுழைந்தனர்; அவர்கள் வந்ததை மேன்மாடத்தின் மீதிருந்து கண்ட மல்லிகா சகிக்கவொண்ணாத சஞ்சலமடைந்து, "இவர்களை யார் வரச் சொன்னது?" என்றாள். "நான்தான் வரச் சொன்னேன்; நீங்கள் இங்கேயே இருங்கள்" என்று தமயந்தி சொல்லிவிட்டுக் கீழே இறங்கி வந்தாள். வெளியில் ஓர் அறைக்குள் வந்து உட்கார்ந்திருந்த துக்கோஜிராவையும், பெண்களையும் பார்த்துத் தமயந்தி, "ஓகோ; நீர் தான் துக்கோஜிராவோ?" என்றாள்.
துக்கோ : (தமயந்தியைக் கண்டு அதிசயித்து) ஆம்; நான் தான் துக்கோஜி. நீங்கள் யாரென்பது தெரியவில்லையே? வஸந்தராயருடைய மனைவி ...?
தம : என் பெயர் தமயந்தி பாயி. என்னைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எனக்கும் வஸந்தராவுக்கும் சிநேகிதம். இங்கே ஒரு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் அதைத் தெரிந்து கொள்ள பிரியப்படுவீர்கள் என்று உங்களை அழைத்து வரச் சொன்னேன். நீர் வஸந்தராயருடைய பழைய சிநேகிதரல்லவா?