பக்கம்:வசந்த மல்லிகா.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சக்கிலியர் சாமிக்கு செருப்புப் பூசை

245

தம : பரசுராம பாவாவின் பேர்த்தி ஸஞ்சலாக்ஷி என்பவளைச் சேர்ந்து விட்டது.

துக்கோ : என்ன! ஸஞ்சலாக்ஷியா? அந்தப் பெயரையே நான் கேட்டதில்லையே!

தம : ஆம். கேட்டிருக்க மாட்டீர்கள். ஆனால், அவள் நிரம்பவும் நல்லவள்; அவளைப் பார்த்தால் நீங்கள் அவளிடத்தில் நிரம்பவும் பிரியப்படுவீர்கள்.

துக்கோ : அப்படியா! நிரம்ப சந்தோஷம்! எங்களுக்கு இந்த ஜெமீந்தாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எவராயிருந்தாலும் அவர்களை நாங்கள் தெய்வத்தைப் போல பாவிப்போம். அவர்களை விட்டுப் பிரிவதே வழக்கமில்லை.

தம : அப்படியானால் நான் போய் ஸஞ்சலாக்ஷியை அழைத்துக் கொண்டு வருகிறேன். ஆனால், நீர் சொன்ன இன்னொரு விஷயம் நிச்சயந்தானா? ஸஞ்சலாக்ஷியிடத்தில் பழக்கமாயிருக்க வேண்டுமானால், துர் நடத்தையுள்ள மல்லிகா முதலியோரை இனி நீங்கள் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. அது உங்களுக்குச் சம்மதமா?

ஸீதா : அதைப் பற்றி இனி சந்தேகமென்ன?

கமலா : அந்த விபசாரியின் முகத்தில் இனி நாங்கள் விழிப்போமா? ஒருநாளும் இல்லை . அதுவும் தவிர, இந்த ஜெமீனை ஆள ஒரு சீமாட்டி வந்திருக்கையில், அந்தக் கழுதை எங்கள் வீட்டில் அடி வைக்கவும் விட மாட்டோம்.

தம : நீங்கள் சொல்வதைக் கேட்க எனக்கு நிரம்ப ஸந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் மல்லிகாவினிடத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருப்பதை ஸஞ்சலாக்ஷி கேள்விப்பட்டால், உங்கள் மேல் அருவருப்புக் கொள்வாள். ஆகையால், சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள். நான் போய் அவளை அழைத்துக் கொண்டு வருகிறேன் - என்று சொல்லிய வண்ணம் தமயந்தி அவர்களை விட்டுச் சென்றாள்.

கமலா : இப்போதுதான் என்னுடைய மனம் குளிர்ந்தது. எங்களை அலட்சியம் செய்த வஸந்தராவின் வாயில் மண் விழுந்ததா! ஒழியட்டும்; எனக்குப் பரமாநந்தமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/263&oldid=1234109" இலிருந்து மீள்விக்கப்பட்டது