246
வஸந்தமல்லிகா
ஸீதா : மல்லிகாவைக் காட்டிலும் நாம் என்ன அழகில் குறைந்து விட்டோமா? அவள்மேல் மாத்திரம் அவனுக்கு அவ்வளவு பைத்தியம் என்ன? நம்மிடம் வெறுப்பு என்ன? துஷ்டனுக்கு இது வேண்டும். எவ்வளவு சீக்கிரமாக வந்ததோ அவ்வளவு சீக்கிரமாக எல்லாம் ஒழிந்து போய் விட்டது - என்றாள்.
அடுத்த நிமிஷத்தில் யாரோ ஒருவர் வந்த காலடியோசை உண்டாயிற்று; உச்சி முதல் உள்ளங்கால் வரை வைரங்களையும், உயர்ந்த பட்டாடையையும் அணிந்து கொண்டவளாய் பளபளவென்று மின்னிய மேனியினளாய் தெய்வ ரம்பையைப் போல் மல்லிகா அவர்களுக்கெதிரில் வந்து நின்றாள். நின்றவள் ஒரு விதமான சஞ்சலத்தையும், புன்சிரிப்பையும் காட்டிய முகத்தோடு, கமலாவிடம் நெருங்கி அவளை அணைத்துக் கொள்ளும் எண்ணத்தோடு ஆவலாகவும் அன்பாகவும் தனது கைகளை விரித்தாள்.
அவளைக் கண்ட துக்கோஜிராவ் திடுக்கிட்டுத் திகைத்துப் பின் வாங்கினான். பெண்கள் இருவருக்கும் கோபத்தினாலும் பொறாமையினாலும் முகம் சுருங்க, கண்கள் சிவந்தன. அவள் மீது விழுந்து அவளைக் கடித்துத் தின்று விட நினைப்பவரைப் போல மூவரும் குரூரமாக அவளை நோக்கித் துடிதுடித்து உருட்டி விழித்தனர். அதைக் கண்ட மல்லிகா, "என்ன கமலா! என்னோடு பேசக் கூட மாட்டீர்கள் போலிருக்கிறதே!" என்றாள். உடனே துக்கோஜிராவ் கனைத்துக் கொண்டு, "மல்லிகா! காரியம் இவ்வளவு தூரத்துக்கு வந்த பிறகு நான் சும்மா இருப்பது பிசகு. உண்மையைச் சொல்லி விடுகிறேன்; கேள். நீ என்ன பாசாங்கு வேஷம் போட்டுக்கொண்டு இந்த மாளிகைக்கு வந்திருக்கிறாயோ அது எங்களுக்குத் தெரியவில்லை ; அது எப்படி இருந்தாலும் நீ செய்ததை இந்த ஊரில் எவரும் மறக்கவில்லை. காரியம் அப்படி நடந்த பிறகு உனக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்க நியாயமில்லை. நாங்கள் உன்னோடு பேசுவதும் தகாது" என்றான்.