உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறந்தவர் பிழைத்தது எங்ஙனம் சொல்வது!

253

அவள் மீது கொண்ட ஆசையினால் உண்டான பைத்தியத்தினால், தம்மை மறந்து அந்த உருவத்தை அவர் அணைத்துக் கொள்ளச் சென்றார்; அது உயிருடனிருந்த மல்லிகாவைக் காட்டிலும் அதிக அழகாயும் இன்பகரமாகவும் வசீகரமாகவும் இருந்ததைக் காணவே, அவரது வியப்பும் திகைப்பும் முன்னிலும் கோடி மடங்கு அதிகரித்தன. "ஆகா! என்ன ஆச்சரியம்! எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா! நீ யார்? உயிருடன் இருப்பவளா? நீ என்னுடைய ஆசைக் கண்ணாட்டியைப் போல இருக்கிறாயே! நீ உண்மையில் அவள்தானா?" என்ற கெஞ்சிக் கொஞ்சி வினவினார்.

அப்போது மல்லிகா நிமிர்ந்து ஒருவித அருவருப்போடு பார்த்து, 'நான் மல்லிகாதானே! சந்தேகமென்ன?" என்றாள்.

வஸ : இல்லை, இல்லை. என்னை ஏமாற்றாதே! இதென்ன இந்திரஜாலமாயிருக்கிறதே! என்னுடைய பிரிய சுந்தரி மல்லிகா இறந்து போய்விட்டாளே! - என்று வியப்போடு கூறினார்.

அதற்குள் மல்லிகா தன்னை மெதுவாக அவரது ஆலிங்க னத்திலிருந்து விடுவித்துக் கொண்டாள். அந்த க்ஷணத்தில், அவளது மனதில் கோடானு கோடி எண்ணங்கள் தோன்றின. அவர் தனது விஷயத்தில் செய்ய நினைத்த வஞ்சகமெல்லாம் நினைவுக்கு வந்தது.

உடனே மல்லிகா, "என்ன வேடிக்கையாக இருக்கிறது! நானாவது இறக்கவாவது! தாங்கள் வஞ்சிக்க எண்ணிய மல்லிகா தானே நான்! ஒன்றையும் அறியாதவர்களைப் போலப் பேசுகிறீர்களே!" என்றாள்.

வஸ : (தமது தலையில் கையை வைத்துக் கொண்டு குழம்பிய முகத்தோற்றத்தோடு) இறக்கவில்லையா? இது விந்தையாக இருக்கிறதே! இதென்ன கனவா! அல்லது உண்மைதானா? எங்கே! உன்னை இன்னொரு முறை தொட்டுப் பார்க்கிறேன்! எங்கே! நீ இன்னொரு வார்த்தை சொல் - என்று பலவாறு பிதற்றித் தத்தளித்தார். அதைக் கண்ட மல்லிகாவின் கோபம் சிறிது தணிய, அவரது விஷயத்தில் ஒருவித இரக்கம் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/271&oldid=1234412" இலிருந்து மீள்விக்கப்பட்டது