256
வஸந்தமல்லிகா
வஸ : ஹா! ஈசுவரா! இதுவும் உன் சோதனையா? இதுவும் உன் திருவுளக் கூத்தா! - அடி சுந்தரி! உன் மேல் குற்றமில்லை . என்னுடைய கால வித்தியாசம். உன்னை வஞ்சிக்கும் எண்ணத் துடன் நான் உன்னை அழைத்துக் கொண்டு போனதாகவா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? அது தவறான எண்ணம் என்று நான் எப்படி உனக்கு ருஜுப்படுத்தப் போகிறேன். உன் மனம் திருப்தி அடையும்படி அதை நான் எப்படி எடுத்துச் சொல்லப் போகிறேன்! (சிறிது யோசனை செய்து) சரி; சரி; நல்ல வேளையாக இதோ ஒரு காகிதமிருக்கிறது; இதைப் பார். பார்த்த பிறகாவது இந்தத் தவறான அபிப்பிராயம் மாறாதா; பார்க்கலாம் - என்று தமது சட்டைப் பையில் வைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்து அவளிடம் நீட்டினார்.
மல்லிகா மிகுந்த ஆவலோடு அதை வாங்கிப் படித்துப் பார்த்தாள். அது அவர்களது கலியாணத்திற்கு தஞ்சையில் அவரது மாளிகையின் வாசலில் கொட்டகைப் பந்தல் போட்டுக் கொள்ளும்படி முனிசிபாலிடியாரால் கொடுக்கப்பட்டிருந்த அநுமதிச் சீட்டு; மல்லிகா அதன் தேதியை பார்த்தாள். தானும் அவரும் இரகசியமாக தஞ்சைக்கு வந்த காலத்திற்கு அது முற்றிலும் பொருத்தமாக இருந்தது. அதைக் கண்டவுடன், அவளது முகம் சடக்கென்று மாறியது. அவளது கோபம் எல்லாம், சூரியனைக் கண்ட இருளைப் போல ஒரே நொடியில் பறந்தது. மிகுந்த அச்சமும், வணக்கமும், கிலேசமும், கரைகடந்த பிரேமையும் அவளது மனதில் பொங்கி எழுந்து அவளை மேற்கொண்டன. வெயில் காலத்தில் நீர் வற்றியிருக்கும் போது, தீப்பொறியைக் கக்கும் மணல் நிறைந்த ஆற்றில் திடீரென்று பெருத்த வெள்ளம் தோன்றிப் பொங்கி எழுந்து கரை புரண்டு போவதைப் போல அவரிடம் அவள் கொண்ட காதல் வெள்ளம் சுரந்து வழிந்தது. அவளது தேகம் துடிதுடித்தது. வார்த்தைகள் திக்கிப் போயின; மனம் கொதித்தது. தான் அவரது விஷயத்தில் பெருத்த அபராதி யானதை நினைக்க அவளது தேகம் குன்றியது. அவள் வெட்கித் தலை குனிந்தாள். கண்கள் கலங்க, கண்ணீர் மளமள வென்று ஊற்றெடுத்து முத்துச் சரங்களைப் போலக் கன்னங்களில் வழிந்தது.