உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறந்தவர் பிழைத்தது எங்ஙனம் சொல்வது!

259

நண்பர்களாகிய தங்களை நாங்கள் என்ன விதமாக ஸ்தோத்திரம் செய்தாலும் மனம் அமைதியடையாது. எங்கள் உயிருள்ள வரையில் தங்களை மனசார நினைத்து, வாயாரத் துதிப்பதே நாங்கள் செய்யக்கூடிய கைம்மாறு. அதைத் தவிர வேறு என்ன இருக்கிறது!" என்றாள்.

* * *

அதன் பிறகு இரண்டு மாத காலம் கழிந்தது. ஒரு நாள் மாலையில் யௌவன ஸ்திரீ புருஷரிருவர் சென்னைக் கடற்கரையில் மிக்க உல்லாஸமாய் நீரின் ஓரமாக நடந்து கொண்டிருந்தனர். அந்த யௌவன மங்கை இயற்கையில் தந்தத்திற் கடைந் தெடுக்கப்பட்ட பதுமையைப் போல அழகே வடிவாக அமைந் திருந்தனள். அவள் அணிந்திருந்த வைர ஆபரணங்களாலும், பட்டாடைகளாலும் அவளது வனப்பு ஆயிரம் மடங்கு சிறந்து தோன்றியது. அவள் அங்கு சென்ற ஜனங்களின் கண்களுக்கு ஒரு பெருத்த விருந்தாக இருந்தாள். அவளைக் கண்டோர் ஒவ்வொருவரும் தமது மனதில் அவளது இனிய வடிவத்தைப் பதித்துக் கொண்டு சென்றனர். அந்தச் சுந்தர மடமயிலாள் அடிக்கடி கடலை நோக்குவதும், தனது காதலனிடத்தில் குதூகலமாக ஏதோ வார்த்தை ஆடுவதுமாக அன்னம் போல அழகு நடை நடந்தாள். அவளோடு நடந்த மன்மத புருஷன் அவளது வார்த்தைகளைக் கேட்டு கலகலவென்று நகைப்பதும், அவளோடு கொஞ்சிக் குலாவி தேன் போல மறுமொழி கூறுவதுமாய் நடந்தார். அவர்கள் இருவரும் தாம் பிறந்தது முதல் யாதொரு துன்பத்தையும் துயரத் தையும் அனுபவித்தே அறியாதவர்ளைப் போல வெளிக்குக் காணப் பட்டமையால், காண்போர் யாவரும் அவர்களை நோக்கிப் பொறாமை கொண்டு நெடுமூச் செறிந்து, "புருஷர் பெண்ஜாதி இருந்தால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! நாம் என்ன ஜென்மமெடுத்தோம். கேவலம் நடைப் பிணங்கள். இவர்கள் இரண்டு சுவர்க்க லோகங்கள் ஜதையாகப் போவதைப் போல் அல்லவா இருக்கிறார்கள்!" என்று சொல்லிக் கொண்டு போகும் படி செய்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/277&oldid=1234418" இலிருந்து மீள்விக்கப்பட்டது