இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
வஸந்தமல்லிகா
அன்றிரவு போஜனம் செய்து சயனித்துக்கொள்ளும் வரையில் கமலா ஸீதா ஆகிய இருவரும் பெரிதும் குதூகலமடைந்தவராய்ப் புதிய ஜெமீந்தாரைப் பற்றியும், பண்டிகைக்குச் செய்ய வேண்டுவதைப் பற்றியும் ஓயாமல் பன்னிப்பன்னிப் பேசிப் பிதற்றிக் கொண்டிருந்தனர். இரவு 9-மணி நேரமாயிற்று. இருவரும் படுத்துக் குறட்டைவிட்டு நித்திரை செய்யத் தொடங்கினார்கள். துக்கோஜிராவ் தனது வழக்கப்படி ஒரு தலையணையை எடுத்துக் கொண்டு அடுத்த திண்ணையில் படுத்துக் கொள்ளச் சென்றான். வீட்டுக் காரியங்களனைத்தையும் முடித்த பிறகு மல்லிகா தன்னை அவர்கள் காணாவண்ணம் மெதுவாக வீட்டை விட்டு வெளிக் கிளம்பி, சமுத்திரக் கரையை நோக்கி நடந்தாள்.