2-வது அதிகாரம்
வேடன்வலைப் பேடன்னம்
ஜெமீந்தார் பரசுராமபாவாவின் பங்களாவானது பவானி யம்மாள்புரத்தின் மேற்குக் கோடியில் சமுத்திர கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அது பெருத்த அரண்மனை போல எண்ணிறந்த மாடங்களையும், கூடங்களையும், உப்பரிகைகளையும் கொண்டதாய், மிகுந்த அழகும் கம்பீரமும் தோன்ற நின்றது. அதற்கு, சமுத்திரத்தைப் பார்த்தவண்ணம் ஒரு வாசலும் அந்த வாசலுக்கு எதிர்புறத்தில் முன்வாசலுமிருந்தன. இரண்டு வாசல்களிலிருந்தும் கீழே இறங்கச் சலவைக் கற்களால் அமைக்கப்பட்ட 15-படிகளும், படிகளின் இருபுறங்களிலும் ஒற்றைக் கல்லினால் செதுக்கி நிறுத்தப்பெற்ற பெருத்த யானைகளும் இருந்தன. சமுத்திரத்தை நோக்கிய பக்கத்தில் மாளிகைப் படியிலிருந்து தண்ணிர் நிலை வரையில் பூஞ்சோலையிருந்தது. முடிவில், தண்ணீரில் இறங்கி-விளையாடும் பொருட்டு படித்துறை ஒன்றிருந்தது. பங்களாவின் மற்ற மூன்று பக்கங்களிலும் விநோதமாக அமைக்கப்பட்டிருந்த அடர்ந்த தோட்டமிருந்தது. அந்த மாளிகை எப்போதும் பூட்டப் பெற்றிருப்பினும் அதன் தோட்டத்து வாசல் மாத்திரம் திறக்கப்பட்டிருப்பது வழக்கம். ஆதலால், அந்தச் சிற்றூர்வாசிகள் அனைவரும் சுயேச்சையாக அதற்குள் நுழைந்து சந்தோசமாயிருந்து விட்டுப்போவதுண்டு.
நமது மல்லிகா துக்கோஜிராவின் வீட்டில் அவர்களுடன் இருக்கையில் நிரம்பவும் சந்தோஷத்துடன் இருப்பதாய்க் காணப்பட்டாள். ஆயினும், பகல் முழுவதும் தன் மனதில் மறைந்து கிடந்த விசனத்தை வெளியிடும் பொருட்டு அவள் அப்போதைக் கப்போது இரவில் வெளிக்கிளம்பி, அருகிலிருந்த சமுத்திரக் கரைக்குப் போய் பங்களாவிற்குள்ளிருக்கும் மணல் நிறைந்த கரையில் உட்கார்ந்துகொண்டு சிந்தனை செய்து, கண்ணீர்