16
வஸந்தமல்லிகா
சொன்னது நினைவிற்கு வந்தமையால் அவரே புதிய ஜெமீந்தாரென்று அவள் உடனே யூகித்துக் கொண்டாள். தான் அந்த இரவில் தனிமையில் அங்கிருந்ததைப் பற்றி அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்னும் நினைவு அவளது தேகத்தைக் குன்றச் செய்தது. அவர் தன்னைப் பார்த்து விடுவாரோ என்னும் அச்சமும் நாணமும் ஒன்றுகூடி அவளை ஒடுக்கி வதைத்தன. அவர் தன்னை யாரென்று கேட்டால், தான் என்ன மறுமொழி தருவதென்று நினைத்து நடுநடுங்கினாள். அவர் தன்னைக் காணுமுன், எவ்விதமாயினும் முயன்று இடப்புறமாக பங்களாவைச் சுற்றிக்கொண்டு போய்விட வேண்டுமென்று அவள் தீர்மானித்துக் கொண்டு படிகளின் கீழே இறங்கி கல்யானையின் பக்கத்தில் மறைந்தாள். அதற்குள், அவ்விரு புருஷரும் படிகளுக்கு நாலைந்து கஜதுரத்தில் வந்துவிட்டனர். ஆதலின், அதற்குமேல் தான் நடந்தால் அவர்களது பார்வையில் தான் நிச்சயமாய்ப் பட வேண்டுமென்பதை அவள் உணர்ந்தமையால், அதற்குமேல் என்ன செய்வதென்பதை அறியாதவளாய்ச் சிறிது நேரம் தயங்கினாள். மாதர்க்கணிகலமான நாணம், மடம், அச்சமென்னும் துணைவர்களால் வருத்தப்பட்டவளாய் மெய் பதைக்கக் கல் யானைக் கருகில் ஒன்றியொளிந்து நின்று, "இவர்கள் படிகளில் ஏறி மாளிகைக்குள் போய்விட்டால் நான் பிழைத்தேன். படியில் ஏறாமல் மேலும் இடப்புறத்தில் வந்தால் என்னைக் கண்டு கொள்வார்களே! நான் என்ன செய்வேன்? ஈசுவரா நீதான் இன்று என்னுடைய மானத்தைக் காக்க வேண்டும்" என்று சுவாமியை நினைத்து தியானம் செய்தாள்.
அவ்விரு புருஷரும் தற்செயலாய்ப் படிகளில் ஏறினர். ஜெமீந்தார் முதற்படியின் மேல் நின்று கொண்டார்; வயோதிகர் அதற்கு நாலைந்து படிகளுக்குக் கீழ் மரியாதையாக நின்று முன்னவர் கேட்பதற்கு விடையளித்த வண்ணமிருந்தார்.
ஜெமீந் : ஸகாராம்! நான் பூனாவில் எத்தனையோ பங்களாவைப் பார்த்திருக்கிறேன். இவ்வளவு ரமணியமான இடத்தை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை. பரசுராம பாவா நல்ல சுகபுருஷரென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் அவருடைய புத்தியின் விசேஷம் நன்றாக விளங்கியது.