பக்கம்:வசந்த மல்லிகா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வேடன்வலைப் பேடன்னம்

19

ஜெமீந் : வேறு யார் பேருக்கு அவர் எழுதியிருக்கக் கூடும்?

ஸகா : அப்படி இருக்காது. அவருக்கு என்னைத் தவிர அந்தரங்கமான மனிதன் எவனுமில்லை. அவர் வேறே சாஸனம் எழுதி வைத்திருந்தால், அதை எனக்குக் காட்டாமல் வைத்திருக்க மாட்டார். உங்களை வேடிக்கையாகப் பயமுறுத்த வேண்டுமென்று இப்படி எழுதியிருக்க வேண்டுமன்றி வேறில்லை.

ஜெமீந் : சரி வேறே வார்சுதாரன் முன்னுக்கு வருகிற வரையில் நாம் அப்படித்தான் நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஸகா : தாங்கள் இரண்டு மாளிகைகளையும் பார்த்தீர்களே: எங்கே தங்குவதாய்த் தீர்மானம் செய்தீர்கள்?

ஜெமீந் : எனக்கு இன்னும் ஒரு யோசனையும் தோன்ற வில்லை. நீர் எல்லாவற்றிற்கும் விடியற்காலம் தஞ்சைக்குப் போய்ச் சேரும். நான் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இங்கே இருந்து கிராமங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு தஞ்சைக்கு வந்து முடிவான எனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். நேரமாகிறது; போய்ப் படுத்துக்கொள்ளும்.

ஸகா : சரி; உத்தரவு.

என்று சொல்லிவிட்டு ஸகாராம்ராவ் மாளிகைக்குள் நுழைந்து தனது படுக்கையறைக்குப் போய்ச் சேர்ந்தான். உடனே ஜெமீந்தார் படிகளை விட்டுக் கீழே இறங்கி சமுத்திரத்தின் படித்துறையை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினார். கல்யானையின் மறைவில் ஒளிந்திருந்த வண்ணம், அங்கு நிகழ்ந்த சம்பாஷணை முழுதையும் கேட்டுக் கொண்டிருந்த மல்லிகாவுக்கு அப்போதே உயிர் வந்தது. ஜெமீந்தார் படித் துறைக்குப் போய்விடுவாரென்றும், பிறகு, அவரது கண்ணில் படாமல் தான் வெளியே போய்விடலாமென்றும் அவள் நினைத்து வேகமாய் வெளியில் போகத் தயாராக நின்றாள். ஆனால், ஜெமீந்தார் நேராய்ப் போகாமல், சிறிது தூரம் போய்த் திரும்பித் திரும்பி உலாவியவண்ணம் இடப்புறமிருந்த கல்யானையை நோக்கி நடந்தார். இனி அங்கே ஒளிந்திருப்பது தவறென்று நினைத்த மல்லிகா, அந்த இடத்தை விட்டு வெளியில் வந்து வேகமாய் அப்பால் நடந்தாள். அதைக் கண்ட ஜெமீந்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/37&oldid=1229197" இலிருந்து மீள்விக்கப்பட்டது