பக்கம்:வசந்த மல்லிகா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேடன்வலைப் பேடன்னம்

23

நினைத்தால் அது முற்றிலும் துன்பத்தைத் தருவதாய் முடிகிறது. என் மனப்பிணி நீங்காமலே என்னை வருத்துகிறது. எந்த இடத்தில் இருந்தால் மனம் சந்தோஷம் அடையுமென்று நான் இது வரையில் ஊரூராய் அலைந்து திரிகிறேன். எங்கும் சுகமில்லை. இந்த இடமாவது இன்பம் தருமாவென்று பார்க்க இங்கே வந்தேன். இந்த விஷயத்தில் நீதான் எனக்கொரு யோசனை சொல்ல வேண்டும். இந்த இடத்திலிருப்பதால் குணமுண்டாகுமா?" என்று கேட்டார் ஜெமீந்தார்.

"ஐயா என்னைத் தாங்கள் மேன்மேலும் பரிகாஸம் செய்வதாகத் தோன்றுகிறது. நான் ஒன்றையுமறியாத அபலைப் பெண். இந்த விஷயத்தைப் பற்றி எனக்கென்ன தெரியப் போகிறது! இவ்விதமான கேள்விகளை என்னிடம் கேட்பது அழகல்ல. தங்களுக்கென்ன குறைவிருக்கிறது? சகல வைபவங்களும் நிரம்பப் பெற்ற தாங்கள் எங்கிருந்தாலென்ன? ராமன் எங்கிருந்தாலும் அது அயோத்தியல்லவா!" என்றாள் மல்லிகா. "உனக்கென்ன சீராட்டிப் பாராட்டத் தாய் தகப்பன் முதலிய அருமையான பந்துக்களும், அன்புடன் கூடிக் குலாவிப் பேச சிநேகிதிகளும் இருக்கிறார்கள். உனக்கொன்றுங் குறைவில்லை. உன்னைப்போல மற்றவரையும் நினைத்து நீ சுலபமாய்ச் சொல்லி விட்டாய்" என்று புன்சிரிப்போடு கடிந்து தெரிவித்தார் ஜெமீந்தார்.

“எனக்குத் தாயுமில்லை; தகப்பனுமில்லை; வேறே உறவினருமில்லை. நானும் இந்த உலகில் ஏகாங்கிதான்" என்று விசனத்தோடு மல்லிகா மறுமொழி கூறினாள். அப்போது அவளுடைய குரல் தடுமாற கண்களில் நீர் ததும்பியது. அதைக் கண்ட ஜெமீந்தாரின் மனமும் கலங்கியது.

"அப்படியா! உன் வரலாற்றைக் கேட்க என் மனதில் பெருத்த சஞ்சலமுண்டாகிறது. புருஷர் எவ்வளவு ஆதரவற்றவராயிருந்தாலும் அவர்கள் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடுவார்கள். உன்னைப் போன்ற யெளவன ஸ்திரிகளின் கதி என்னவாகும் உலகத்தின் தன்மையை அறியாத சிறுமியருக்கு எவ்வளவு விபத்துக்கள் சம்பவிக்கும் அவற்றையெல்லாம் விலக்கித் தப்பித்துக்கொள்வது மெத்தக் கடினமான காரியம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/41&oldid=1229208" இலிருந்து மீள்விக்கப்பட்டது