3-வது அதிகாரம்
முடவனும் கொம்புத்தேனும்
முன்னதிகாரத்தில் விவரிக்கப்பட்ட விஷயங்கள் நிகழ்ந்த தினத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒருநாட்காலையில், துக்கோஜிராவின் வீட்டு உட்புறம் வழக்கத்திற்கு மாறாக நன்றாய்ச் சுத்தி செய்யப்பட்டும், கோலமிட்டு அலங்கரிக்கப் பெற்றும் இருந்தது. அதிலிருந்தோர் யாவரும் அதிக ஊக்கத்தையும், ஆவலையும் காண்பித்து அங்குமிங்கும் போய் வந்து கொண்டிருந்தனர்.
கமலா, ஸீதா ஆகிய இருவரும் சீவிச் சிங்காரித்து அழகிய உடையணிந்து பொட்டின்மேல் பொட்டிட்டுக் கண்களில் மை தீட்டிக் கொண்டவராய்க் கணத்திற்கொருமுறை கண்ணாடியில் பல்லிளித்துத் தங்களது அழகைப் பார்த்து மகிழ்வடைவதும், சமயலறைக்குட்சென்று அங்கிருந்த மல்லிகாவினிடத்தில், கூர்மையான அம்பைத் தொடுப்பதைப் போல, சுருக்கென்று தைக்கும் பற்பல கடுமொழிகளைச் சொல்லித் திரும்புவதுமாய் இருந்தனர்.
கமலா தனது தங்கையை நோக்கி, "அடி ஸீதா! அதென்ன கண்ணாடியைப் பார்த்த மணியமாய் இருக்கிறாயே! அழகு சிந்திப் போகிறது! சிறியவர்களெல்லாம் இப்படிச் செய்தால், பெரியவர்களின் கதி அதோகதிதான். ஜெமீந்தார் வரும் நேரமாகி விட்டது. உள்ளே போய் சமையல் என்ன நிலைமையில் இருக்கிறதென்று பார். அந்த நீலி மோசம் செய்தாலும் செய்து விடுவாள். போஜனத்துக்குத் தாமதமானால், நமக்கல்லவோ அவமானம்" என்று அதட்டினாள். அதைக் கேட்ட ஸீதா, "அக்கா ஜெமீந்தார் இந்த பங்களாவில் வாசஞ் செய்ய இன்றுதான் வரப் போகிறார். இதற்குள் இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறாயே! வந்து சில நாட்களிருந்தபின் ஒருவேளை அவர் கமலாபாயின்