உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முடவனும் கொம்புத்தேனும்

29

"அக்கா! ஏன் இப்படிக் கோபித்துக் கொண்டு வாயில் வந்தவிதம் பேசுகிறாய்? உங்களுக்குக் கலியாணம் ஆவதில் என்னைக் காட்டிலும் அதிக சந்தோஷமடையக் கூடியவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். இத்தனை வருஷகாலம் என்னோடு பழகியும் என்னுடைய குணத்தை நீங்கள் அறிந்துகொள்ளாதது என்னுடைய துர்ப்பாக்கியமேயொழிய வேறில்லை" என்று கபடமில்லாமல் விசனத்தோடு தெரிவித்தாள் மல்லிகா.

"நரி வலத்திலும் போக வேண்டாம்; இடத்திலும் போக வேண்டாம்; மேலே விழுந்து கடிக்காமல் போனால் அதுவே போதும். நீ சந்தோஷமும் பட வேண்டாம்; விசனமும் பட வேண்டாம்; சும்மாவிருந்தால் அதுவே போதும். எங்களுடைய சிநேகிதர் வரும் நேரமாயிற்று; அவரைச் சாதாரண மனிதரென்று நினைக்காதே; இரண்டு கோடி ஐசுவரியமுடையவர்; நீ அவருக்கெதிரில் நின்று, எங்களுக்கு அவமானங் கொண்டுவந்து வைக்காதே; அவர் போகிற வரையில் நீ வெளியில் தலையைக் காட்டக்கூடாது" என்று கண்டித்துக் கூறினாள் கமலா.

அந்தச் சமயத்தில் வாசற்கதவு திறக்கப்பட்டது; முதலில் துக்கோஜிராவும், பின்னால் வஸந்தராவும் உள்ளே நுழைந்தார்கள். வேறு எவரோ வரப்போகிறாரென்று நினைத்திருந்த மல்லிகா, ஜெமீந்தாரைக் கண்டவுடன் வெட்கிக் கீழே குனிந்தவளாய் விரைவாக உள்ளே நுழைந்தாள். முன்னொரு நாள் இரவில் பங்களாவில் தானும் அவரும் தற்செயலாக சந்தித்ததும், அப்போது நடந்த சம்பாஷணையும், அவர் சொன்ன அன்பான மொழிகளும் அப்போதே நிகழ்வனபோல அவளது மனதிற் காணப்பட்டன. அவரது சங்கர வடிவம் பச்சை மரத்தில் ஆணி அடித்ததைப்போல அவள் மனதில் பதிந்தது. இன்னதென்று விவரிக்க இயலாத ஒருவகையான குழப்பமும் அவளது மனதில் உண்டாயிற்று.

உள்ளே நுழைந்த ஜெமீந்தாரோ, அப்போதே விரிந்த தாமரை மலரைப் போல எழில் வழிய நின்ற மங்கை தம்மைக் கண்டவுடன் மின்னற்கொடி போல மறைந்ததை நோக்கிப் பெரிதும் திகைப்படைந்தார். முன்னிரவில் கண்டபோது இருந்ததைக் காட்டிலும், அவள் அப்போது ஆயிரமடங்கு சிறந்தவளாய்க் காணப்பட்டாள். சூரியனது ஒளியைக் கண்டு கண்ணொளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/47&oldid=1229226" இலிருந்து மீள்விக்கப்பட்டது