பக்கம்:வசந்த மல்லிகா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வஸந்தமல்லிகா

மழுங்கப் பெற்றோருக்கு மற்றெதையும் பார்க்கக்கூடாமல் போவதைப் போல அவளைப் பார்த்தவுடன், அங்கிருந்த ஏனைய மங்கையர் இருவரும் அவருடைய பார்வையில் படவில்லை. புத்தி மாறாட்டமடைந்த நிலைமையில் அவர் உள்ளே வந்தார். அவரைக் கண்டவுடன் கமலாவும் ஸீதாவும் சுருட்டி வாரிக் கொண்டெழுந்து நாணிக்கோணி ஒரு மூலையில் ஆடுகள் ஒடுங்குவதைப்போல ஒருவர்மீதொருவர் உராய்ந்து விகாரமாக நின்றனர்.

அங்குப் போடப்பட்டிருந்த விசிப்பலகையின் மேல் உட்கார்ந்துகொள்ளும்படி துக்கோஜிராவ் ஜெமீந்தாரை வேண்டினான். அவர்களிருந்த இடத்துக்குப் பக்கத்தில் மூடப்பட்டிருந்த சமையலறையின் கதவு அந்தச் சமயத்தில் கொஞ்சம் திறக்கப்பட்டது; மடிக்கப்பட்டிருந்த ஓர் இரத்தின கம்பளம் மெதுவாக வெளியில் வைக்கப்பட்டது. அதை வெளியில் வைக்குமாறு நீட்டப்பட்ட உருட்சி திரட்சி பெற்ற அழகிய சிவந்த கரம், இந்திரஜாலமோவென்னும்படி உடனே உட்புறத்தில் மறைந்தது. அந்தக் குறிப்பை அறிந்த துக்கோஜிராவ் உடனே அந்த இரத்தின கம்பளத்தை எடுத்து விசிப்பலகையின் மேல் விரிக்க, அதன் மீது ஜெமீந்தார் உட்கார்ந்து கொண்டார். கமலா, ஸீதா ஆகிய இருவரும், மல்லிகா செய்த காரியத்தை அறிந்து, அவள் மீது பெருத்த பொறாமை அடைந்தார்கள். மல்லிகாவின் புத்தி நுட்பத்தைக் கவனிக்க ஜெமீந்தார் தமக்குள் பூரிப்பை அடைந்தாரேனும், அதை வெளியிடாமல் எதிரில் நின்ற ஸ்திரீகளை நோக்கி, "ஆகா! கமலா ஸீதா உங்களைப் பார்த்து எத்தனை வருஷங்களாயின. (ஆச்சரியத்துடன்) துக்கோஜி! நான் முதலில் பார்த்தவுடன் இவர்கள் வேறு யாரோவென்று நினைத்து ஏமாறிப் போனேன். குழந்தைகளாயிருந்தவர்கள் எவ்வளவு பெரியவர்களாக உயர்ந்து விட்டார்கள்" என்றார்.

"ஆம், ஆம், நீங்கள் பார்த்து 7, 8-வருவுங்களுக்கு மேலாகிறதல்லவா! நீங்கள் பூனாவிலிருந்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட முதல், உங்களைப் பார்க்க வேண்டுமென்று இவர்களுக்கு எவ்வளவு ஆசை தெரியுமா!" என்றான் துக்கோஜிராவ்.

"கமலா! நான் யாரென்பது உனக்குத் தெரிகிறதா?" என்று அன்போடு கேட்டார் ஜெமீந்தார். அதிகரித்த நாணத்தினால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/48&oldid=1229227" இலிருந்து மீள்விக்கப்பட்டது