உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

வஸந்தமல்லிகா


நீங்கள் கலியாணம் செய்துகொள்வதாக எத்தனையோ தரம் சொன்னீர்களாமே; முகூர்த்தம் எப்போது வைக்கப் போகிறீர்கள்?" என்றாள். அவ்விதமான சொற்களை எதிர்பாராத ஜெமீந்தார் திடுக்கிட்டுத் திகைப்பை அடைந்தாரேனும், அதை வெளியிற் காட்டிக் கொள்ளாமல், "அப்படி நடக்க வேண்டுமென்று பிராப்தமிருந்தால், அதுதானே நடக்கிறது!" என்றார்.

அதுவரையில் தனது பெண்களின் சாதுர்யமான சொற்களைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து பல்லிளித்து நின்ற துக்கோஜிராவ், "போஜனத்துக்கு நாழிகையாகிறது. எழுந்திருக்கலாமோ?" என்று கேட்க, ஜெமீந்தார் எழுந்தார். அதைக்கண்ட மல்லிகா கை கால் சுத்தி செய்துகொள்ள ஒரு கூஜாவில் ஜலம் கொணர்ந்து வைத்து விட்டு இரண்டு இலைகளை விரித்துப் பரிமாறினாள். புருஷர் இருவரும் இலையில் உட்கார்ந்து போஜனம் செய்கையில் ஜெமீந்தார், "இந்தப் பெண் நிரம்ப புத்திசாலியாயிருக்கிறாளே! இவள் யார்?" என்று துக்கோஜிராவைக் கேட்டார்.

"இவள் பூனாதேசத்து அரண்மனையில் வேலையிலிருந்த ஜெஸ்வந்தராவ் என்ற என் சிநேகிதனுடைய மகள். அவன் இறந்துபோய்விட்டான். அப்பொழுது, அநாதையாயிருந்த இவளை 6, 7-வருஷத்துக்கு முன் அவன் என்னிடத்தில் விட்டான். அதுமுதல் இவளை நான் பாதுகாத்து வருகிறேன். அவனை உங்களுக்குக்கூடத் தெரிந்திருக்கலாம். இவள் பெயர் மல்லிகா” என்றான் துக்கோஜிராவ். "இவள் நன்றாகப் படித்திருந்தாலும் இவளுக்கு சமையல் காரியம், சம்பாஷணை முதலியது அவ்வள வாகத் தெரியாது. பார்வையிலிருந்தே புத்திசாலியென்று நினைப்பது எப்போதும் தவறாக முடியும். வெள்ளைத் தோலுக்கும் புத்தியின் கூர்மைக்கும் என்ன சம்பந்தம்?" என்று சிரித்துக்கொண்டு கூறினாள் கமலா.

"கமலா உன்னைக் காட்டிலும் இவள் அதிக புத்திசாலியென்று நான் சொல்லவில்லையே! உனக்குப் பிறகுதான் மற்றவர்கள். நீ இதற்குள் கோபித்துக் கொள்ளாதே!" என்றார் ஜெமீந்தார். அவ்வளவோடு மல்லிகாவைப் பற்றிய சம்பாஷணை முடிந்தது.

"இரண்டு வாரத்துக்குமுன் வந்த நீங்கள் ஒருவருக்கும் சொல் லாமல் மறுநாளே போன காரணமென்ன?" என்றாள் ஸீதா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/50&oldid=1229238" இலிருந்து மீள்விக்கப்பட்டது