பக்கம்:வசந்த மல்லிகா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4-வது அதிகாரம்

பணப் பேய்

ன்று காலையில் தஞ்சை தெற்கு ராஜ வீதியில் ஒரு வீட்டின் கூடத்தில் போடப்பட்டிருந்த விசிப் பலகை ஒன்றன் மேல் ஸகாராம்ராவ் உட்கார்ந்துகொண்டு வெற்றிலை பாக்கு முதலிய வஸ்துக்களைத் துண்டு துண்டாகச் செய்து ஒரு சிறிய பித்தளை உரலில் போட்டு டொக்கு டொக்கென்று இடித்துக் கொண்டிருந்தான். அவனது பற்கள் யாவும் அநேகாய் வீழ்ந்து போய்விட்டமையாலும், மிகுதியிருந்தவை ஆடிக் கொண்டிருந்தமையாலும் அவன் அவ்வாறு வெற்றிலை பாக்குத் துகையல் செய்து கொண்டிருந்தான். அவன் மீதிருந்த உடைகளும் வீட்டிற்குள்ளிருந்த பொருட்களும் அழுக்கடைந்தும் கிழிந்தும் பழையனவாயும் காணப்பட்டு, அவன் தரித்திர நிலைமையிலிருப்பவனோ வென்னும் ஐயமுண்டாக்கின. ஆனால் உண்மையில் அவன் தரித்திரனல்லன். பெட்டிக்குள் வைத்த பணத்தை வெளியில் எடுப்பது பெருத்த பிழையென்பது அவனுடைய பிடிவாதமான கொள்கை. அவன் அதுவரையில் பவானியம்மாள்புரம் சமஸ்தானத்தில் ஸர்வாதிகாரி வேலையில் அளவற்ற பொருட்களைக் கொள்ளையடித்து குவித்திருந்தானாயினும் அவற்றைச் செலவு செய்ய மனமற்றவனாய்க் காசுக்குக் காசு லாபம் வைத்து பணத்தை வட்டிக்குக் கொடுப்பதையும் தொழிலாக வைத்துக் கொண்டிருந்தான். இரவிலும் பகலிலும் எந்த நேரத்திலும் பணம் பணமென்று ஜெபம் செய்து அதையே ஆகாரமாய் மதித்து அவன் உயிரை வைத்துக் கொண்டிருந்தான். முன் கூறப்பட்டபடி உட்கார்ந்திருந்த ஸகாராம்ராவ் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு, "பீமா பீமா” என்று இரண்டு முறை கூப்பிட, உட்புறமிருந்த ஒரு யெளவனப் புருஷன் உடனே வந்தான். அவன் சற்றேறக்குறைய 27-வயதடைந்தவனாயும் உயரமான சிவந்த தேகத்தை உடையவனாயுமிருந்தான்.

அவனைக் கண்டவுடன், "பீமா கலியாணபுரம் ஜெமீந்தாரை எந்த நிலைமையில் வைத்திருக்கிறாய்? நம்முடைய யோசனை எப்போது நிறைவேறும்?" என்றான் ஸகாராம் ராவ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/53&oldid=1229289" இலிருந்து மீள்விக்கப்பட்டது