36
வஸந்தமல்லிகா
உடனே பீமாராவ், "அவன்தான் பெருத்த டம்பாச்சாரி என்பது தெரியுமே; அதோடு சுயபுத்தியும் கிடையாது. ஆனால் அவன் என் சொல்லை மாத்திரம் கேட்கிறான். நம்முடைய எண்ணம் அதி சீக்கிரத்தில் கைகூடும்" என்று கூறினான். உடனே கிழவன், "பீமா குழந்தைப் பருவத்தில் தாய் தந்தையில்லாமல் அநாதையாயிருந்த உன்னை எடுத்து நான் எவ்வளவோ பாடுபட்டு இதுவரையில் வளர்த்தேன். அந்த நன்மையை மறவாமல் என்னுடைய விருப்பப்படி எப்போதும் நடந்து வந்தால் நீ சுகப்படுவாய். எனக்கு உன்னைத் தவிர வேறே யார் இருக்கிறார்கள்? இவ்வளவு பாடுபட்டுத் தேடும் பணமெல்லாம் உன்னைத்தானே சேரப் போகிறது. ஆனால், நான் இறப்பதற்குள், என்னுடைய முக்கியமான ஆசை நிறைவேறாவிட்டால், என் மனம் வேகாது” என்று உருக்கமாகக் கூறினான்.
பீமன் : முக்கியமான ஆசை என்ன? - என்றான்.
கிழவன் : ஏதாவது ஒரு சமஸ்தானத்தை வாங்க வேண்டும். ஜெமீந்தார் என்ற பட்டம் பெற வேண்டும். கலியாணபுரம் ஜெமீந்தார் இப்போது என்னிடத்தில் வாங்கியிருக்கிற கடன் இருபதினாயிரத்துக்கு மேலாகிறது. இன்னும் இருபதினாயிரம் வாங்கிக் கொள்வானாகில், அது நாலைந்து வருஷத்தில் வட்டியும் முதலுமாய் லட்ச ரூபாய்க்கு வந்து விடும். அதன் பிறகு ஜெமீன் சுலபத்தில் நம்முடையது ஆகிவிடும் - என்றான்.
பீமன் : அவன் சிநேகிதர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு குதுகலமாகக் காலங் கழிக்கிறான். சூதாட்டம் முதலிய செலவு களுக்குத் தினம் நூறு இருநூறு ஆகிறது. செலவுக்குக் கையில் பணமில்லையென்றும், கொஞ்சம் கடன் வாங்க வேண்டுமென்றும் சொல்லி, யாரிடத்தில் வாங்கலாமென்று அவனே என்னைக் கேட்டான். உங்களிடத்தில் வாங்கினால் ஒரே இடமாயிருக்குமென்று நான் மெதுவாகச் சொன்னேன். வட்டியைக் கொஞ்சம் குறைக்கும்படி சிபார்சு செய்யச் சொன்னான். அப்படியே ஆகட்டுமென்று சொல்லியிருக்கிறேன் - என்று மறுமொழி கூறினான்.
கிழவன் : "நல்ல காரியம் செய்தாய்! அவனை எப்படியாவது என் வலையில் சிக்கும்படி செய்துவிடு. வட்டியைக் குறைத்துக் கொடுப்பதாகச் சொல்லி அழைத்துக் கொண்டு வா. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்" என்றான்.