பணப்பேய்
37
பீமன் : எப்போது அழைத்துக் கொண்டு வருகிறது?
ஸகா : நான் இப்போது பவானியம்மாள் புரத்துக்குப் போகிறேன். நம்முடைய புதிய ஜெமீந்தார் அங்கேயே இருக்கப் போகிறாராம். மாளிகையைச் சுத்தம் செய்து அலங்கரித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச வேலை மிகுதியிருக்கிறது. அதைச் செய்து முடித்துவிட்டு நாளைய தினம் திரும்பி வந்துவிடுவேன். அவனை நாளைய பகலில் அழைத்துவா - என்றான். “சரி, அப்படியே செய்கிறேன். இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்குள் வஸந்தராயரையா சேர்ந்து விட்டன! என்ன அதிர்ஷ்டம்! பிறந்தாலும் இப்படியல்லவா பிறக்க வேண்டும்! - என்றான் பீமாராவ்.
"நான் இதுவரையில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அந்த விஷயத்திலும் இப்போது பெருத்த சந்தேகமொன்று உண்டாகிவிட்டது. சொத்து அவருக்கு நிலைக்குமோ நிலைக்காதோ என்னும் சந்தேகம் பிறந்திருக்கிறது" என்றான் கிழவன்.
"இத்தனை நாளுமில்லாமல் இப்போது இந்தப் புதிய சந்தேகமுதித்த காரணமென்ன?" என்றான் பீமாராவ்.
"இறந்துபோன பரசுராம பாவா முதலில் வஸந்தராவின் பேரில் இரண்டு வருஷத்துக்குமுன் ஒரு சாஸனம் எழுதி வைத்தார். இப்போது சமீப காலத்தில் அவருக்கு ஒரு கடிதமெழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், வேறொரு வார்சுதாரர் இருப்பதாயும், சொத்துக்கள் அவரையே சேருமென்றும், வஸந்தராவுக்கு சொற்பத் தொகையே கொடுத்திருப்பதாயும் எழுதியிருக்கிறார். அதைப் பார்த்த நிமிஷம் முதல் எனக்குப் பெருத்த சந்தேகமுண்டாகி விட்டது” என்றான் கிழவன்.
பீமன் : இதெல்லாம் பரசுராம பாவாவின் சுயார்ஜிதமான சொத்துதானே? அவர் கடிதத்தில் எழுதியிருப்பது உண்மையானால் வேறு சாஸனம் எழுதித்தானிருக்க வேண்டும்.
ஸகா : கடிதத்தை நானே பார்த்தேன். அப்படித்தான் அவர் எழுதியிருக்கிறார்.
பீமன் : உமக்குத் தெரியாமல் வேறு பாத்தியஸ்தன் எவன் இருக்கிறான்? அவருக்குப் பிள்ளை பெண்கள் ஒன்றும் இல்லையே. அவருக்கு முன்னால் அவருடைய சம்சாரமும் இறந்துபோய் விட்டாளே.