38
வஸந்தமல்லிகா
ஸகா : நீ அவருடைய முதல் மனைவியைப் பற்றிப் பேசுகிறாய். இதில் இன்னொரு ரகஸியமிருக்கிறது. அவர் பாலியராயிருந்தபோது பூனாவில் ஒர் ஏழைப் பெண்ணைக் கண்டார்; அவள் நிரம்பவும் அழகுடையவளாயிருந்தமையால், அவள் மேல் காதல் கொண்டு அவளை அந்தரங்கமாகவே கலியாணம் செய்துகொண்டு அழைத்து வந்து பவானியம்மாள்புரத்து மாளிகையில் எவருக்கும் தெரியாமல் ரகஸியமாக வைத்திருந்தார். அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பூனாவிலிருந்த அதன் பாட்டனிடம் அதை அனுப்பி அதற்குப் பெருத்த பணத் தொகையையும் அனுப்பினார். அங்கே அவர்கள் அந்தப் பெண்ணை வளர்த்துக் கலியாணம் செய்து வைத்தார் களாம். அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாம். உடனே இதன் தாய் இறந்து போனாளாம். அந்தக் குழந்தையும் அவளோடு இறந்துவிட்டதாகச் செய்தி பரவியது. அது இறக்கவில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். அந்தப் பெண் உயிருடனிருந்தால் பரசுராமா பாவா ஒருகால் அதன் பேரில் ஜெமீனை எழுதி வைத்திருக்கலாம். அதைத்தவிர வேறு பாத்தியஸ்தர் எவருமில்லை.
பீமன் : அப்படியா அந்த சாஸ்னத்தை எப்படியாவது நீர் கண்டுபிடித்தால் அது நமக்கு நிரம்பவும் நல்லதல்லவா.
ஸகா : ஆம் ஆம்; அந்தக் கடிதத்தைக் கண்டபின் மாளிகையில் ஓர் இடம் விடாமல் தேடிப் பார்த்தேன். அது அகப்படவில்லை. இருக்கட்டும், இன்னமும் நன்றாகத் தேடிப் பார்க்கிறேன்.
பீமன் : நீர் அதைப் பாரும். நான் அந்தப் பெண் எங்கே இருக்கிறாளென்பதைப் பற்றி விசாரிக்கிறேன். அவள் அகப்படுவாளானால், அவளைக் கலியாணம் செய்து கொள்பவனுடைய பாக்கியமே பாக்கியம்.
ஸகா : சரி! எனக்கு நேரமாகிறது. நான் இப்போது பவானியம்மாள்புரம் போகிறேன். அங்கே நான் சாஸ்னத்தை இன்னமும் தேடிப் பார்க்கிறேன். நீ கலியாணபுரம் ஜெமீந்தார் விஷயத்தை மறந்து விடாதே - என்று சொல்லிவிட்டு எழுந்து நல்ல உடைகளனிந்தபின் வெளியிற் போக, பீமாராவும் உடனே புறப்பட்டு கலியாணபுரம் ஜெமீந்தார் இறங்கி இருந்த ஜாகையை நோக்கிச் சென்றான்.