5-வது அதிகாரம்
ஊசியும் காந்தமும்
தங்களிடம் காட்டாத அன்பையும் பிரியத்தையும் ஜெமீந்தார் மல்லிகாவிடம் காட்டியதைக் கவனித்த கமலா ஸீதா ஆகிய இருவரும் அடிக்கடி தமக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டார்கள்; தங்களது தந்தையின் செவியில் அப்போதைக்கப்போது ஏதோ கோள் சொல்லிக் கொண்டார்கள். என்றாலும், அவர்கள் ஜெமீந்தாரைக் காணும்போதெல்லாம், சந்தோஷமாக இருப்பவரைப்போல் நடித்து கபடமற்றவராய்க் காண்பித்துப் பல்லிளித்தனர்.
அன்று பகல் ஐந்து மணி நேரமிருக்கலாம். ஸகாராம்ராவ் தனது கையில் ஒரு கொத்து சாவிகளை எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு அந்த மாளிகையின் விநோதங்களைக் காட்ட, ஒவ்வோரிடமாக, அவர்களை அழைத்துக் கொண்டு சென்றான். அந்த மாளிகை ஒர் அரண்மனையைப் போல அதிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அலங்கரிக்கப் பெற்றிருந்தது. அது பல நாட்களாக மூடப்பெற்றிருந்தும், அதன் உட்புறம் ஒர் அற்ப மாசுமற்றதாயிருந்தது. தரையெல்லாம் சலவைக் கல்லினால் தளவரிசை செய்யப்பெற்றும், மிருதுவான இரத்தின கம்பளங்கள் நிரந்தரமாக விரிக்கப்பெற்றும் இருந்தது. கச்சேரி மண்டபமும், புஸ்தக சாலையும், படங்களின் மண்டபமும், கிளிகளின் மண்டபமும், கொலு மண்டபமும், சயன அந்தப்புரங்களும், போஜன மண்டபமும், பளிங்கு மண்டபமும், சித்திர மண்டபமும், விளையாட்டு மண்டபங்களும், பிறவும் விநோதமாக அமைக்கப் பெற்றிருந்தன. ஸகாராம்ராவ் அவைகளை ஒவ்வொன்றாய்க் காட்டியவாறு முன்னால் சென்றான். அங்கிருந்த அற்புதமான பொருட்களை என்றுங் கண்டறியாத கமலா ஸீதா துக்கோஜிராவ் ஆகிய மூவரும் யானையைக் கண்ட பட்டிக்-