பக்கம்:வசந்த மல்லிகா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊசியும் காந்தமும்

43

செய்துகொண்டிருப்பதைக் கண்டு, அதற்கு இடைஞ்சல் செய்யக் கூடாதென்று நினைத்துத் திரும்பிப் போனேன். நான் நடந்த ஒசை உன்னை எழுப்பிவிட்டது போலிருக்கிறது. ஆகா! என்ன பாதகம் சம்பவித்தது!" என்று மிகுந்த அன்போடும் உண்மையான விசனத்தோடும் மொழிந்தார் ஜெமீந்தார்.

"அப்படி ஒன்றுமில்லை. நேரமாய் விட்டதே என்று நானே எழுந்தேன். அவர்கள் நிரம்பவும் தூரத்தில் போய்விட்டார்களோ?" என்று புன்சிரிப்போடும் மரியாதையாகவும் கேட்டாள் மல்லிகா.

"அவர்கள் ஆநந்தத்தில் முழுகி மேன்மேலும் பார்த்துக் கொண்டே போகிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் நன்றாய்ப் பார்க்கட்டும். பிறகு நாம் மெதுவாகப் பார்த்துக்கொள்ளலாம். நடந்தது எனக்கும் அலுப்பாக இருக்கிறது” என்று கூறிய வண்ணம் அங்கிருந்த ஒரு மேடையின்மேல் உட்கார்ந்து கொண்டார் ஜெமீந்தார்.

அதுவரையில் தன்னிடத்தில் அவ்வளவு உள்ளார்ந்த அன்பை எவரும் காட்டியதையுணராத மல்லிகா, ஒருநாளிரவு தன்னைச் சந்தித்தது முதல் வரவர அதிகரிக்கும் ஆசையைத்தான் தன் மீது காட்டிவரும் சீமானான ஜெமீந்தாரது இனிய மொழிகளைக் கேட்பது அவளுக்குப் புண்ணில் அமிர்த ஸஞ்சீவியைச் சொரிவது போலிருந்தது. அவரது விஷயத்தில் அடக்கவொண்ணாத ஒரு வகைப் பற்றுண்டாயிற்று. ஆயினும் நாணம், மடம், அச்சம் ஆகிய உணர்ச்சிகள் அவளை ஓயாமல் வருத்தியவண்ணம் இருந்தன. அவ்வளவு உண்மையான பிரியத்தைக்காட்டிய மனிதரின் மனதிற்குத் தான் சிறிதும் வருத்தம் உண்டாக்கக் கூடாதென்று நினைத்த மல்லிகா, அவரது நோக்கத்தையறிந்து கொண்டவளாய் நின்ற வண்ணம், நாற்புறத்தையும் திரும்பிப் பார்த்து, "ஆகா! இந்த இடத்தின் அழகு ஒன்றே போதும் எவ்வளவு மநோரம்மியமாக இருக்கிறது! எல்லாம் பூர்வஜென்ம புண்ணியத்தினால் கிடைக்க வேண்டுமேயொழிய வேறில்லை. இப்படிப்பட்ட இடத்தில் இருந்தால் குணமுண்டாகுமோவென்று சந்தேகப்பட்டு, அன்றிரவு என்னைக் கேட்டீர்களே! இங்கிருப்பதைவிட விசேஷித்த பாக்கியமும் உலகத்தில் இருக்கிறதா?” என்றாள் மல்லிகா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/61&oldid=1229315" இலிருந்து மீள்விக்கப்பட்டது