உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊசியும் காந்தமும்

45

ஒரு விஷயம் கேட்கிறேன். கோபித்துக் கொள்ளாமலிருப்பாயா?” என்றார் ஜெமீந்தார்.

"என்ன விஷயம்? எவ்வளவோ புத்திமானாகிய தாங்கள் பிறருக்குக் கோபம் உண்டாகக்கூடிய மொழியை ஒரு நாளும் சொல்லமாட்டீர்களே! அப்படி இருக்க, இவ்விதமான பீடிகை எதற்கு? தயவுசெய்து தெரிவியுங்கள்" என்றாள் மல்லிகா.

"நான் இந்த மாளிகைக்கு முதலில் வந்தபோது எனக்கு இவ்விடத்திலிருக்க வேண்டுமென்னும் எண்ணம் இல்லாதிருந்தது. அன்று உன்னைக் கண்ட முதல், உத்தமியான உன்னை அடிக்கடி காணலாமென்றும், இத்தகைய நல்ல மனிதர் அருகிலிருக்கும் இந்த இடத்தில் இருப்பதனால் சந்தோஷம் அடையலாமென்றும் நினைத்தே இங்கு வந்திருக்க நான் தீர்மானித்தேன். ஆகையால், மற்றவர் வரும்போது நீயும் அடிக்கடி அந்த மாளிகைக்கு வந்தால் என் மனசுக்கு இன்பமுண்டாகும்" என்று உருக்கமாகக் கூறினார் ஜெமீந்தார்.

"இதுதானா ஒரு பெரிய விஷயம்! இதற்குக் கோபமென்ன! தங்கள் உத்தரவுப்படியே செய்யக் காத்திருக்கிறேன். மற்றவர்கள் இங்கு வரும்போது அவர்கள் என்னையும் இங்கு அழைத்து வருவார்களானால் நான் அவசியம் வருகிறேன்" என்றாள் மல்லிகா. "மல்லிகா! நீ நெடுநேரமாக நின்றுகொண்டிருக்கிறாயே! அந்த மேடையின் மேல் உட்கார்ந்துகொள்" என்று அன்புடன் வேண்டினார் ஜெமீந்தார்.

"இல்லையில்லை, பாதகமில்லை. அதோ அந்தத் தொட்டியிலிருக்கும் ரோஜாப்பூவின் அழகைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் உட்கார்ந்து கொண்டால் அது மறைந்து போகும்” என்று புன்சிரிப்போடு கூறினாள் மல்லிகா.

"அதற்காக ஏன் நிற்க வேண்டும்? அது இதோ உன்னைத் தேடி உன்னைத் தேடி உன் கரத்திற்கு வந்துவிடுகிறது” என்று கூறியவண்ணம் ஜெமீந்தார், பெரிதாக மலர்ந்திருந்த அந்த ரோஜாப் புஷ்பத்தைப் பறித்து மல்லிகாவின் கையில் கொடுத்தார்.

"அடாடா! அவரவர்கள் தத்தம் இடத்திலிருப்பதே அவரவர்களது பெருமைக்கும் சுயயோக்கியதைக்கும் குறைவில்லாத காரியம். இதைப் பறித்துக் கையில் பிடித்துக்கொண்ட பிறகு இதன் மகிமையும் இதன்மேல் நாம் வைத்த அன்பும் குறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/63&oldid=1229318" இலிருந்து மீள்விக்கப்பட்டது