பக்கம்:வசந்த மல்லிகா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

வஸந்தமல்லிகா

போகுமே என்று சிரித்துக்கொண்டே மரியாதையாக அந்த மலரை வாங்கினாள் மல்லிகா.

அதே சமயத்தில், "ரோஜாப்பூ எனக்கில்லையா?” என்று சொல்லிக்கொண்டு பொறாமையாலும் கோபத்தாலும் மாறுபட்ட முகத்தோடு கமலா அங்கு தோன்றினாள். அவளைத் தொடர்ந்து மற்றவரும் அங்கு வந்தனர். அவள் சொன்ன சொல்லை ஜெமீந்தார் கவனியாதவர்போல, "ஸகாராம்! இன்னும் பார்க்கவேண்டிய இடமிருக்கிறதா?" என்றார்.

"சயன அந்தப்புரத்தைப் பார்க்கவேண்டும். அது எதிரிலிருக்கிறது; அதிக தூரமில்லை" என்றான் ஸகாராம் ராவ்.

"சரி கதவைத் திறவும்; பார்த்துவிட்டுப் போகலாம்" என்றார் ஜெமீந்தார். எதிரிலிருந்த அந்தப்புரத்துக் கதவை அவன் உடனே திறக்க எல்லோரும் அதற்குள் நுழைந்தனர். மற்ற இடங்களைக் காட்டிலும், அதிகமாக அதற்குள் படங்களும், நிலைக்கண்ணாடிகளும், சித்திரப் பதுமைகளும், வெள்ளியினால் செய்யப்பட்ட லால்ஷேட், குலோப், லஸ்டர் முதலிய தீபங்களும், முத்தும் இரத்தினமும் வைத்திழைக்கப்பட்டு, சித்திரத் தொங்கல்கள் நிறைந்து தந்தத்தினாலும் தங்கத்தினாலும் செதுக்கப்பட்ட மஞ்சமும் காணப்பட்டன. அவற்றைக்கண்ட எல்லோரும் பெரிதும் திகைத்து வியப்படைந்தனர். கமலா அவைகளுக்கெல்லாம் ஒரு தினம் தான் எஜமானியாகலாமென்று நினைத்தவளாய்த் தன்னையும் தனது தாழ்ந்த நிலைமையையும் முற்றிலும் மறந்திருந்தாள். அப்போது ஜெமீந்தார் கட்டிலின் கீழ்ப்பாகத்தைத் தற்செயலாகப் பார்க்க, பூட்டப்பட்ட சிறிய தங்கப் பெட்டியொன்று அங்கு இருக்கக் கண்டு நிரம்பவும் ஆச்சரியமடைந்தார். அதை வெளியில் எடுக்கும்படி அவர் உத்தரவு செய்ய, ஸகாராம் ராவ் அதை எடுத்தான். "இதன் சாவி இந்தக் கொத்திலிருந்தால் இதைத் திறவும்" என்றார் ஜெமீந்தார். உடனே ஸகாராம் ராவ் சாவிகளை ஒவ்வொன்றாய் நுழைத்துப் பார்த்துக் கடைசியில் ஒரு திறவுகோலால் அதைத் திறந்தான். அதில் பட்டுத் துணியால் நன்றாக மூடி வைக்கப்பட்டிருந்த ஒரு வஸ்துவைக் கண்டு அது என்னவோவென்று எல்லோரும் ஆச்சரியமடைந்தார்கள். ஜெமீந்தார் அதைக் கையில் வாங்கி பட்டுத் துணியை விலக்கிப் பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/64&oldid=1229319" இலிருந்து மீள்விக்கப்பட்டது